சென்னை முதல் டெட்ராயிட் வரை! திவ்யாவின் வெற்றிப் படிகள்

சென்னை முதல் டெட்ராயிட் வரை!  திவ்யாவின் வெற்றிப் படிகள்

திவ்யாவின் வெற்றிப் படிகள்

உலக அளவில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் தர வரிசையை தொகுத்து அளிக்கும் “ஃபார்ச்சூன் 500” தரப்பட்டியலில் இடம்பிடித்த நிறுவனங்களுக்கு தலைமை ஏற்பது உயரிய சமூக அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. தரவரிசைப் பட்டியலில் உள்ள நிறுவனங்களில் 5 முதல் 7 சதவீத பெண்கள் மட்டுமே அந்த நிறுவனம் அல்லது அதன் ஒரு பிரிவின் தலைமை பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இந்த சூழ்நிலையிலும் தலைமை பொறுப்பை எட்டிப் பிடித்தவர் சென்னையைச் சேர்ந்த திவ்யா சூர்யதேவரா ஆவார். 2013-ம் ஆண்டில் அமெரிக்காவின் ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் முதன்மை நிதி அலுவலராக அவர் பொறுப்பேற்றார். அதன் மூலம் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் ஊட்டும் நம்பிக்கைத் தாரகையாக திகழ்கிறார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த நிலையில், வங்கிப் பணியில் இருந்தவாறே தன்னை படிக்க வைத்த அம்மாவின் எண்ணப்படி பள்ளித் தேர்வுகளில் முதலிடம் பெற்றார். பட்டப்படிப்பை சென்னையில் முடித்துவிட்டு, அமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை முதுகலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தார்.

அந்த அனுபவம் பற்றி தெரிவிக்கும் போது, “ஹார்வர்ட் என்னை பல வழிகளில் திணறடித்தது. கலாசார ரீதியான சங்கடங்களையும் அங்கே எதிர்கொண்டேன். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் இங்கே வந்துவிட்டேன். கையில் அதிகப் பணப்புழக்கம் இல்லாததால், நண்பர்கள் கல்விச் சுற்றுலா சென்ற போது என்னால் கலந்துகொள்ள முடியவில்லை.

அந்த சமயத்தில் கல்விக் கடனைத் திருப்பி செலுத்துவது பற்றியே எப்போதும் நினைத்து வந்தேன். அந்த நிலையில் உடனே ஒரு வேலை தேடிக்கொள்ள வேண்டும் என்பதும் கூடுதலான மன அழுத்தத்தை ஏற்படுத்தியது” என்று திவ்யா குறிப்பிடுகிறார்.

படித்து முடித்து, அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் நிதித்துறையில் பகுத்தாய்வாளராக 2004-ம் ஆண்டு சேர்ந்தார். நியூயார்க்கில் வீடு, டெட்ராய்ட்டில் அலுவலகம் என்ற நிலையில் தினமும் விமானப் பயணத்திலேயே சுமார் 3 மணி நேரம் சென்று விடும். அதனால், நேர மேலாண்மையை கற்றுக்கொண்டு உழைத்திருக்கிறார். 2013-ம் ஆண்டில் அதன் முதன்மை நிதி அலுவலர் மற்றும் முதன்மை முதலீட்டு அலுவலர் என இரு துறைகளின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்தார். திறமை மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் 2017-ம் ஆண்டில் கார்ப்பரேட் நிதிப்பிரிவு துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.

தற்போது ‘ஸ்ட்ரைப்’ என்ற மின்வர்த்தக நிறுவனத்தின் முதன்மை நிதி அலுவலராகப் பதவியேற்றிருக்கிறார். திறமை இருந்தால் எந்த இலக்கும் தொட்டுவிடும் தூரம் தான் என்பதை திவ்யா சூர்யதேவரா நிரூபித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here