கடையம்: 3 பேரை கடித்து குதறிய கரடிக்கு ரேபிஸ் நோய் – பரபரப்பு தகவல்கள்

கடையம்: 3 பேரை கடித்து குதறிய கரடிக்கு ரேபிஸ் நோய் – பரபரப்பு தகவல்கள்

கடையம் அருகே 3 பேரை கடித்து குதறிய 10 வயது பெண் கரடிக்கு ரேபிஸ் நோய் பரவியது எப்படி? என்பது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் கடந்த 6ம் தேதி பைக்கில் சென்ற வியாபாரியை வழிமறித்து பெண் கரடி கடித்து குதறியது. இதை தடுக்கச் சென்ற இரண்டு விவசாயிகளையும் கரடி கடித்து குதறியதால் 3 பேரும் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து 3 பேரை கடித்து குதறிய பெண் கரடியை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது காட்டுப்பகுதிக்குள் பதுங்கியிருந்த கரடி மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததை பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். எனவே கரடியை பிடிக்க முயற்சிக்கும் போது தாக்குதல் நடத்தலாம் என்பதால், பாதுகாப்பு கருதி, நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன், கால்நடை ஆய்வாளர் அர்னால்ட் ஆகியோர் சுமார் 15 அடி தூரத்தில் இருந்து மயக்க ஊசி செலுத்தி அன்று இரவில் கரடியை பிடித்தனர்.

பிடிபட்ட கரடி மறுநாள் களக்காடு அருகே செங்கல்தேரி அடர் வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் மயக்க ஊசி ெசலுத்தி பிடிபட்ட கரடி திடீரென மர்மமான முறையில் இறந்தது. இதனால் மயக்க மருந்து பாதிப்பினால் கரடி இறந்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்தது. ஆனால், கரடி நுரையீரல் பாதிப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் கரடியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து களக்காடு தலையணை அருகே கரடி உடல் எரிக்கப்பட்டது. இந்நிலையில் கரடியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது. இதில் இறந்த கரடிக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு மட்டுமின்றி ரேபிஸ் எனும் வெறிநோய் பாதிப்பு இருந்துள்ளது. இதனாலேயே கரடி ஆக்ரோஷத்துடன் மனிதர்களை தாக்கியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். பொதுவாக ரேபிஸ் நோய் தாக்கினால் மனிதர்களோ, விலங்குகளோ 100 சதவீதம் இறப்பு உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் இறந்த பெண் கரடிக்கு ரேபிஸ் நோய் எப்படி பரவியது என்று சமூக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். உயிரிழந்த இந்த பெண் கரடி பல நாட்களாக ஊருக்குள் நடமாடி வந்துள்ளது. அப்போது, ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்ட நாய் உள்ளிட்ட ஏதேனும் விலங்குகளை தாக்கிய போது கரடிக்கு பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து நெல்லை ராமையன்பட்டி கால்நடை மருத்துவகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் துறை தலைவரும், பேராசிரியருமான முத்துக்கிருஷ்ணன் கூறுகையில், ‘ரேபிஸ் எனும் ஆட்கொல்லி நோய், கடிப்பது மற்றும் தோலில் காயத்தை ஏற்படுத்துவது மூலம் பரவும். இறந்த கரடிக்கு ரேபிஸ் நோய் இருந்ததால் இந்த கரடி கடித்த விலங்குகளுக்கும், மற்ற மனிதர்களுக்கும் ரேபிஸ் நோய் தாக்கியிருக்கும்.

கரடியின் விரல் பட்டு காயம் ஏற்பட்டாலும் பரவும். இந்த நோயின் அறிகுறிகள் உடனடியாக தெரியாது. பாதிக்கபட்டவர்களின் எதிர்ப்பு சக்தியை பொறுத்து 3 மாதமோ, 6 மாதமோ அல்லது ஒரு வருடத்துக்கு பிறகு தான் தெரியும். இந்த நோய்க்கு பாதிக்கபட்டவர்கள் வெறி பிடித்த நாய் எப்படி இருக்குமோ அது போன்று மிகவும் ஆக்ரோசமாக காணப்படுவர். அதனால் உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும்.

நானும் என்னுடன் பிரேத பரிசோதனையில் இருந்தவர்களும் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டோம். மொத்தம் 4 தடுப்பூசிகள் போட வேண்டும். அதிக அளவு மயக்க மருந்து கொடுத்ததால் கரடி இறந்திருக்கலாம் என்பது தவறான தகவல். கரடியை பிடிக்க இரண்டு ஊசிகள் போடப்பட்டது. மயக்கம் தெளிவதற்கு 4 மணி முதல் 6 மணி நேரம் ஆகும். இறந்த இந்த கரடி இறப்பதற்கு சில நாட்கள் முன் உணவருந்தாமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது’ என்றார்.

காயமடைந்தவர்களுக்கு தடுப்பூசி

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குநர் செண்பகபிரியா கூறுகையில், ‘இறந்த கரடிக்கு ரேபிஸ் நோய் பரவியுள்ளது. ஊருக்குள் புகுந்த இந்த கரடியை நாய் கடித்திருந்தாலும் அல்லது வவ்வால், மரநாய் கடிப்பதன் மூலமும் பரவியிருக்கலாம். கரடி தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.

தாக்குதல் சம்பவம் நடந்த அன்று கரடி துரத்திய பொதுமக்கள் மற்றும் காயம்பட்டவர்களை மீட்ட வனத்துறையினருக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த உள்ளோம். இதுகுறித்து தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநரிடம் பேசி உள்ளேன். மருந்துகளை தயார் செய்து விரைவில் அப்பகுதியில் தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பூசி போடப்படும்’ என்றார்.

இதையும் படிக்கலாமே: கடையம் அருகே 3 பேரை கடித்து குதறிய கரடி திடீர் உயிரிழப்பு: அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தப்பட்டதா?

தவற விடாதீர்: கடையம்: மீண்டும் கரடி நடமாட்டமா? வனத்துறையினர் ரோந்து சென்று கண்காணிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here