கடையம் அருகே 3 பேரை கடித்து குதறிய கரடி திடீர் உயிரிழப்பு: அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தப்பட்டதா?

கடையம் அருகே 3 பேரை கடித்து குதறிய கரடி திடீர் உயிரிழப்பு: அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தப்பட்டதா?

கரடிக்கு செலுத்தப்பட்ட ஊசியில் அதிக அளவு மயக்க மருந்து சேர்க்கப்பட்டதா?

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் காட்டு விலங்குகள் அடிக்கடி நுழைவது வாடிக்கையாகிவிட்டது. விவசாய நிலங்களுக்குள் காட்டுப்பன்றி, யானை, கரடி ஆகியவை நுழைந்து சேதத்தை ஏற்படுத்திவருகின்றன. அத்துடன், சிறுத்தைகள் குடியிருப்புக்குள் நுழைந்து ஆடுகள், நாய் உள்ளிட்டவற்றை அடித்துத் தூக்கிச் சென்றுவிடுகின்றன.

அதனால் வனப்பகுதியிலுள்ள 18 கி.மீ தூரத்துக்கு சோலார் மின்வேலி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கிராம மகக்ள் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து 15 கி.மீ தூரத்துக்கு சோலார் மின்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் அகழியும் வெட்டப்பட்டிருக்கிறது. ஆனாலும், காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் குறையவில்லை.

இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி மசாலா வியாபாரி வைகுண்டமணி என்பவர் தனது பைக்கில் பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்துக்குச் சென்றிருக்கிறார். அவரை வழிமறித்த கரடி திடீரென தாக்கியதில் அலறித் துடித்திருக்கிறார். அப்போது அந்த வழியாகச் சென்றவர், அதை கவனித்து கிராமத்துக்குள் சென்று தகவல் தெரிவித்திருக்கிறார்.

கரடியிடம் சிக்கிய வைகுண்டமணியைக் காப்பாற்ற முயன்ற சகோதரர்களான சைலப்பன், நாகேந்திரன் ஆகியோரையும் கரடி பலமாகத் தாக்கியது. அதில் சைலேந்திரனுக்கு ஒரு கண்ணும் நாகேந்திரனுக்கு இரு கண்களும் பாதிக்கப்பட்டன். இருவரின் முகம், வாய், மூக்கு உள்ளிட்டவை சிதைந்தன. அதனால் இருவருக்கும் அறுவை சிகிச்சை மூலம் சிதைந்த முகம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இருவரும் நலமுடன் இருப்பதாக நெல்லை அரசு மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

வியாபாரி மற்றும் விவசாயிகளைத் தாக்கிய கரடியை சுட்டுப் பிடிக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் நெல்லை அரசு கால்நடை மருத்துவமனையிலிருந்து மருத்துவர் வரவழைப்பட்டு கரடிக்கு மயக்க மருந்து செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் கரடி பிடிபட்டது. நான்கு மணி நேரம் மயக்கத்தில் இருந்த கரடி வாகனத்தில் ஏற்றப்பட்டு, களக்காடு அருகே செங்கல்தேரி வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அடர்ந்த வனப்பகுதியில் கரடியை வனத்துறையில் விட்டதும் காட்டுக்குள் ஓடிச்சென்று மறைந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் வனத்துறை ஊழியர்கள் அந்த பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது வனத்துறையினர் விட்ட இடத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் அந்த கரடி இறந்து கிடந்தது. இதுதொடர்பாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து வந்தனர். கரடியின் திடீர் சாவு குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அதிகமான நுரையீரல் பாதிப்பு காரணமாக கரடி இறந்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கரடிக்கு அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தியதாலேயே உயிரிழப்பு நேர்ந்திருப்பதாக வன உயிரின ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்துப் பேசியவர்கள், “இரண்டு மணி நேரத்துக்கு மயக்கம் இருக்கும் வகையிலேயே மயக்க ஊசியைச் செலுத்த வேண்டும். ஆனால், கடையத்தில் பிடிபட்ட கரடி நான்கு மணி நேரத்துக்கும் மேலாக மயக்கத்திலேயே இருந்தது. அதனால் ஏற்பட்ட பாதிப்பினாலேயே உயிரிழந்திருக்க வேண்டும்” என்கிறார்கள்.

இது தொடர்பாக வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கடையம் பகுதியில் பிடிபட்ட கரடி செங்கல்தேரி வனப்பகுதியில் கொண்டு செல்லப்பட்டு காட்டுக்குள் விடப்பட்டது. 7-ம் தேதி மாலை 5 மணியளவில் உயிரிழந்துவிட்டது. கரடியை உடற்கூறாய்வு செய்ததில், 10 வயதுகொண்ட கரடிக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. அதன் காரணமாக உயிரிழந்த கரடியை எரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

நன்றி: விகடன்

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here