கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பெண் தலைவர்
கொரோனா பெருந்தொற்றால் உலக நாடுகள் அச்சத்தில் மூழ்கியுள்ளன. எண்ணற்ற உயிர்களை பலி கொண்டிருக்கும் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர்; தற்போது தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து, தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவ ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் தகுந்த சிகிச்சை முறையும், தடுப்பூசிகளும் இல்லாமல் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். வளர்ந்த நாடுகள் கூட செய்வதறியாமல் நின்றன. அந்த நேரத்தில்தான் கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திக் காட்டியது நியூசிலாந்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவர் நியூசிலாந்தின் பெண் பிரதமர் ஜெசின்டா அச்டேன் ஆவார்.
கொரோனா பரவல் தீவிரமாகிக் கொண்டிருந்த வேளையில், தொற்றை தடுப்பதற்காக நியூசிலாந்து நாட்டின் எல்லைகளை முடி துரிதமாக செயல்பட்டார் ஜெசின்டா. ஊரடங்கு, முகக்கவசம் அணிதல் போன்ற தடுப்பு முறைகளை கட்டாயமாக்கினார். மக்களின் உயிரைக் காத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். ஜெசின்டாவின் திறமையான ஆளுமையை ஏற்றுக்கொண்ட மக்கள், அவரை இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமர் ஆக்கி யுள்ளனர்.
1980-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி பிறந்த ஜெசின்டா கேட் அர்டேன். அமெரிக்க கத்தோலிக்க மத வழியைச் சார்ந்தவர். ஜெசின்டா தன்னுடைய மழலைப் பருவத்தில், ஊர் சிறார்கள் காலில் செருப் பின்றியும், உண்ண உணவின்றியும் இருப்பதைக் கண்டு வருந்தினார். ‘அந்த நிலையை மாற்ற தன்னால் என்ன செய்ய முடியும்? என்று அவருக்குள் எழுந்த கேள்வியே, ஜெசின்டாவின் அரசியல் வாழ்விற்கான அடித்தளமானது.
17-ம் வயதில் பட்டப்படிப்புக்கு முன்னரே நியூசிலாந்து தொழிலாளர் கட்சியில் இணைந்தார். ஒரு மறு தேர்தலில் கட்சிக்காக பணி புரிந்தார். அதன் மூலம் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமரும், தன் முன்னோடியுமான ஹெலனுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
2007-ம் ஆண்டு ஒன்றிய சோஷியலிச இளைஞரணி தலைவர் ஆனார் 2017-ம் ஆண்டு மவுண்ட் ஆலபாட் மாநகரின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜெசின்டா. தன் இடைவிடாத உழைப்பால் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஆனார்.
நெருக்கடியான சூழலில் தேர்தலை சந்தித்த அவரது கட்சி, ஜெசின்டாவின் திடமான வழிகாட்டுதலால் 2017-ம் ஆண்டு ஆட்சி அமைத்தது. தனது 37-ம் வயதில் உலகின் இளமையான பிரதமர் ஆனார் ஜெசின்டா.
போர்பஸ் இதழின் மூலம் இந்த வருடத்தின் சிறந்த மனிதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெசின்டா தற் போது பிரதமராக மட்டுமல்லாமல், தன் இரண்டு வயது மகளுக்கு சிறந்த தாயாகவும் திகழ்கிறார். பெண்கள் வீட்டை மட்டுமல்லாமல், நாட்டையும் மிகச்சிறந்த முறையில் வழி நடத்துவார்கள் என்பதை ஜெசின்டா அர்டேன் மீண்டும் ஒருமுறை இவ்வுலகிற்கு எடுத்துரைத்துள்ளார்.