2022-ஆம் ஆண்டின் ‘டாப் 10’ தென்காசி ஆளுமைகள் – முழுப் பட்டியல்

2022-ஆம் ஆண்டின் ‘டாப் 10’ தென்காசி ஆளுமைகளை பெருமிதத்துடன் அடையாளப்படுத்துகிறது Tenkasi Life

ஆகாஷ் IAS

செழித்தெழும் தென்காசி

எந்த வருடம் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு குற்றாலச் சாரல் திருவிழாவை கோலாகலமாக நடத்தியது; மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றியது; பொதுமக்களின் குறை தீர்ப்பதில் வேகம் காட்டியது… என தென்காசி மாவட்ட மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஆட்சியர் ஆகாஷ் அவர்களை பாராட்டி மகிழ்கிறோம்.

முனைவர். விஜயலட்சுமி

சூழலியல் முன்னோடி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 75 வயதிலும் தென்காசி மாவட்டம் முழுவதும் பம்பரமாக சுழன்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மேலகரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியை விஜயலட்சுமி அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.

ராஜா IFS

தன்னம்பிக்கை நாயகன்!

5 முறை முயன்று சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசி மாவட்டம் அகரக்கட்டு கிராமத்தை சேர்ந்த ஒரு சாதாரண விவசாயியின் மகனும், முதல் தலைமுறை பட்டதாரியுமான ராஜா IFS அவர்களின் சாதனையை எண்ணி பெருமையடைகிறோம்.

சுப்புராஜ் IFS

விடாமுயற்சி நாயகன்

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வனத்துறையில் கடைநிலை ஊழியராக பணியைத் தொடங்கி, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இன்று IFS (Indian Forest Service) அதிகாரியாக உயர்ந்திருக்கும் கடையநல்லூரை சேர்ந்த சுப்புராஜ் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.

ஜெபா ஆனந்த்

தடைகளை தாண்டிய வெற்றி

சாதிக்க ஊனம் தடையல்ல என்பதற்கு சான்று மாதாபுரத்தை சேர்ந்த இந்த ஜெபா ஆனந்த். தனது யூடியூப் சேனல் மூலமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள வில்லுப்பாட்டு கலைஞர்களின் திறமைகளை உலகறியச் செய்தவர். தென்காசி மாவட்டத்தில் சில்வர் பட்டன் பெற்ற முதல் யூடியூப் சேனல் இவருடையது. புதிய ஆண்டில் இன்னும் நிறைய சாதிக்க ஜெபாவை வாழ்த்துகிறது Tenkasi Life.

ஷேக் முகைதீன்

உழவர்களின் உற்ற தோழன்

செங்கோட்டை வட்டார துணை வேளாண் அலுவலா் இவர். ‘வயல்ல நெல்லு; வரப்புல உளுந்து’ என்ற பயிர் பாதுகாப்பு நுட்பத்தை கடைக்கோடி விவசாயிகள் வரை கொண்டு சேர்த்தவர். அரசு ஊழியராக இது இவருக்கு கடைசி ஆண்டு. அவரை கவுரவப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது Tenkasi Life.

பசுமை வலசை இயக்கம்

பசுமை விரும்பிகள்

கணக்கப்பிள்ளை வலசை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நடத்திவரும் அமைப்புதான் இது. தென்காசியில் இந்த ஆண்டு பிரமாண்டமான மாரத்தான் ஓட்டத்தை நடத்தியதோடு, மரக்கன்றுகள் நடும் பணியில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய பசுமை வலசை இயக்கத்தினரை இருகரம் தட்டி வாழ்த்துகிறது Tenkasi Life.

அமிர்த ஜோதி IAS

மண்ணின் பெருமை

தற்போது சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்து வரும் இவர் தென்காசி மாவட்டம் வடநத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். நம் மண்ணுக்கு பெருமை சேர்த்த அமிர்த ஜோதி IAS அவர்கள் மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துகிறோம்.

சுரேஷ் குமார்

மாணவர்களின் ஏணிப்படி

இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் இவர். இந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஊட்டி வளர்ப்பவர்.  ‘ஆசிரியர் பணியே அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி’ என்று வாழ்ந்துகாட்டும் சுரேஷ் குமார் அவர்களின் அறப்பணி தொடர வாழ்த்துக்கள்.

Dr.சற்குணம்

அறம்’ வளர்க்கும் அரசு மருத்துவர்

சுந்தரபாண்டியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர். கிராமப்புற மக்களுக்கான மருத்துவ சேவையில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருபவர். இதற்காக மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த மருத்துவர் விருது பெற்றவர். மருத்துவத்தை ஒரு தொழிலாக பாராமல் அதனை சேவையாக செய்துவரும் மருத்துவர் சற்குணம் அவர்களது பணிசிறக்க வாழ்த்துக்கள்.

(இது Tenkasi Life Digital Awards 2023-க்கு தேர்வானோரின் பட்டியல் அல்ல. ‘Tenkasi Life Digital Awards 2023’ விருதுகளுக்கு தேர்வானவர்களின் பட்டியல் வருகிற ஜனவரி 5ஆம் தேதி முதல் வெளியிடப்படும்.. ‘Tenkasi Life Digital Awards 2023’ விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான லிங்க் இதோ.. Apply here)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here