Tenkasi Life Digital Awards 2024: மேடையை அலங்கரிக்கப் போகும் திறமையாளர்கள்

தென்காசி மாவட்டத்தில் உள்ள நிஜ நாயகர்களை, ஒவ்வொரு ஆண்டும் அடையாளம் கண்டு வெளிச்சம் பாய்ச்சி மேடையேற்றி வருகிறது Tenkasi Life. அந்த வகையில் இந்த ஆண்டும் வேறுவேறு துறைகளில் முத்திரை பதித்த ஆளுமைகள், உங்களின் மனமுவந்த பாராட்டுகளோடும், உங்களின் பலத்த கைதட்டல்களோடும் கௌரவிக்கப்படவிருக்கிறார்கள்.

Tenkasi Life Digital Awards 2024 விருதுகளுக்கு தேர்வானோர் பட்டியல் இதோ..

வாழ்நாள் சாதனையாளர் விருது: ஆறுமுகம், சுரண்டை

புத்தகம் வாசிக்கும் பழக்கம் அருகி வரும் சூழ்நிலையில், அவ்வப்போது நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளே வாசகர்களின் அறிவுப் பசிக்கு விருந்தாக அமைகின்றன. மேலும், புத்தகத் திருவிழா நடத்துவது அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கும். அவ்வகையில் சுரண்டையில் கடந்த 4 ஆண்டுகளாக புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி, வாசிப்பை நேசிப்பவர்களின் அறிவுப் பசியை போக்கிவரும் ஆறுமுகம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கிறது தென்காசி லைஃப்.

சிறந்த பெண் சாதனையாளர் விருது: ஃபாத்திமா, சுரண்டை

தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர் என்ற பெருமைக்குரியவர். மாற்றுத்திறனாளி கணவரை ஆட்டோவில் சுமந்தபடி, பம்பரமாக சுற்றிச் சுழன்று குடும்பத்தை காப்பாற்றும் உழைப்பின் சிகரம் இவர். தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஃபாத்திமா அவர்களுக்கு சிறந்த பெண் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கிறது தென்காசி லைஃப்.

சிறந்த குருதிக் கொடையாளர் விருது: திலீபன் கோபால்சாமி, பாவூர்சத்திரம்

இரத்ததானம் மூலம் விலை மதிப்பற்ற மனித உயிரை காப்பாற்றுவது புனிதமான செயலாகும். அவ்வகையில் தனது 19 வயதில் ரத்த தானம் செய்யத் தொடங்கியவர் தற்போது 34 வயதில் 55 முறை ரத்த தானம் செய்திருக்கிறார். இவர் அளித்த ரத்த தானத்தால் காப்பாற்றப்பட்ட உயிர்கள் ஏராளம். அவருக்கு சிறந்த குருதிக் கொடையாளர் விருது வழங்கி தலைவணங்குகிறது தென்காசி லைஃப்.

சிறந்த பத்திரிகையாளர் விருது: சுப கோமதி, சங்கரன்கோவில்

தென்காசி மாவட்டத்தில் பெண் செய்தியாளர்கள் மிகவும் குறைவு. தயக்கம், பயம், குடும்பத்தில் ஆதரவு இல்லாததால் வரத் தயங்குகின்றனர். அதை தகர்த்தெறிந்து, முன்னணி செய்தி தொலைக்காட்சியில் நிருபராக திறம்பட பணியாற்றி, தென்காசி மாவட்டத்தின் மூலைமுடுக்கெல்லாம் பயணித்து செய்தி சேகரித்து வரும் சுப கோமதிக்கு சிறந்த பத்திரிகையாளர் விருது வழங்கி கவுரவிக்கிறது தென்காசி லைஃப்.

சிறந்த இளம் எழுத்தாளர் விருது: டாக்டர். சா.விஜயகுமார், நெற்கட்டான்செவல்

இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் பிறந்த நெற்கட்டான்செவல் கிராமத்தைச் சேர்ந்த இவர், 8 புத்தகங்களுக்கு ஆசிரியர் ஆவார். அனைத்துமே வாசகர்கள் மத்தியில் மிகுந்த கவனமும் வரவேற்பும் பெற்றவை. அவருக்கு சிறந்த இளம் எழுத்தாளர் விருது வழங்கி மகிழ்கிறது தென்காசி லைஃப்.

Social Media Celebrity Award: விக்னேஷ் குமார், வல்லம்

இன்ஸ்டாகிராமில் Ooru Suthuvoma என்ற பக்கம் மூலமாக இவர் போடும் பதிவுகள் அனைத்தும் வேற லெவல். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று சொல்லுமளவுக்கு இவரது பதிவுகளுக்கு லைக்ஸ் அள்ளும். அவருக்கு Social Media Celebrity விருது வழங்கி மகிழ்கிறது தென்காசி லைஃப்.

இளம் சாதனையாளர் விருது: முவித்ரா, தலைவன்கோட்டை

ஏழு வயதேயான இச்சிறுமி ஸ்கேட்டிங் விளையாட்டில் 10 கி.மீ. தூரத்தை 27 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தவர். அடுத்து இந்தோனேசியாவில் நடக்கவிருக்கும் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளார். அவருக்கு இளம் சாதனையாளர் விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது தென்காசி லைஃப்.

பசுமை பாதுகாவலர் விருது: சுரேஷ் வனச்சரக அலுவலர், கடையநல்லூர்

வனவிலங்கு வேட்டை, காடுகளுக்கு தீ வைப்பு உள்ளிட்ட வனக் குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருபவர். வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரிதும் அக்கறை செலுத்துபவர். சிறப்பான பணிக்காக தென்காசி மாவட்டர் ஆட்சியரிடம் விருது பெற்றவர். அவருக்கு பசுமை பாதுகாவலர் விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது தென்காசி லைஃப்.

சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது: அஜி மாயிஷா, காளத்திமடம்

கபடியில் சத்தமில்லாமல் சாதித்து வரும் ஓர் இளம் வீராங்கனை இவர். அண்மையில் ராஜஸ்தானில் நடந்த தேசிய கபடி போட்டியில் வெற்றிவாகை சூடி, தென்காசி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தார். அஜி மாயிஷா அவர்கள் மென்மேலும் கபடியில் வெற்றிகளை குவித்து, சாதனைப் பெண்ணாக வலம் வர வாழ்த்தி மகிழ்வதோடு, அவருக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருது வழங்கியும் கவுரவுக்கிறது தென்காசி லைஃப்.

தனித்திறன் சாதனையாளர் விருது: நிலோஃபர், இலஞ்சி

ஓவியமா..? இல்லை புகைப்படமா..? என வியக்குமளவிற்கு தத்ரூபமாக ஓவியம் தீட்டி அசத்துகிறார் இவர். உயிரோட்டமுள்ள ஓவியங்கள் பேசும் என்பார்கள். இவர் வரைந்த ஓவியங்கள் அதை மெய்ப்பிக்கின்றன. வண்ணத் தூரிகையில் வர்ணஜாலம் நிகழ்த்தும் நிலோஃபர் அவர்களுக்கு தனித்திறன் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கிறது தென்காசி லைஃப்.

சிறந்த ஆசிரியர் விருது: ஆ.டேவிட் ஞானராஜ் அரசு தொடக்கப்பள்ளி, பாலசுப்பிரமணியபுரம்

மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பிப்பதோடு நில்லாமல், மாறுபட்ட புதிய சிந்தனையோடு மாணவர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக்கறையை ஊட்டி, நற்பண்புகளைப் போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியரான டேவிட் ஞானராஜ் அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது தென்காசி லைஃப்.

சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பு விருது: அசுரா நண்பர்கள் அறக்கட்டளை, ஆலங்குளம்

ஆலங்குளத்தில் அசுரா என்ற பெயரில் இளைஞா்கள் பலா் ஒன்று திரண்டு பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1,000 மரக்கன்றுகளை நட்டதோடு அவற்றை பராமரித்தும் வருகின்றனர். ஆலங்குளத்தை பசுமை நிறைந்த பகுதியாக மாற்ற முயற்சி எடுத்துவரும் அசுரா நண்பர்கள் அறக்கட்டளைக்கு சிறந்த சுற்றுச்சூழல் அமைப்புக்கான விருது வழங்கி கவுரவிக்கிறது தென்காசி லைஃப்.

சிறந்த விவசாயி விருது, அல்போன்ஸ், அகரக்கட்டு

இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற குரல் ஒட்டுமொத்தமாக ஒலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இயற்கை விவசாயத்தில் சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறார் அல்போன்ஸ். அவருக்கு சிறந்த விவசாயி விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது தென்காசி லைஃப்.

சிறந்த மனிதநேய விருது: உதவும் கரங்கள், இலஞ்சி

மனிதநேயத்தை பேணிக் காக்க ஒரு குடையின் கீழ் ஒன்றுகூடி, எளிய மக்களுக்கு ஓடோடி உதவி வருகின்றனர் இவர்கள். குறிப்பாக, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களின் நலனில் பெரிதும் அக்கறைக் கொண்டு ஏராளமான உதவிகளை வழங்கியிருக்கின்றனர். பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினர். மனிதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உதவும் கரங்கள் குழுவினருக்கு சிறந்த மனிதநேய விருது வழங்கி கவுரவிக்கிறது தென்காசி லைஃப்.


Title Sponsor: Drizzle Restaurant

Presented by: Tenkasi Medical Center | Arulmigu Senthilandavar Polytechnic College |Selvarani Textiles

Co-Presented by: Thrill Park | Ponraj Store, Surandai | Pandiya Rani Foundation | Kalvithanthai Thiru. Congres Pon Pandian Foundation

Associate Sponsors: Shanthi IAS Training Academy | Nila Sweets & Bakery Family Restaurant | Tenkasi Properties | K Shark Power Technologies | Ryan Builders | Noon Mart | Into The Wild Resort | Chocolate House

Decoration Partner: P.S.P. | Poster Designing Partner: Fashion Flex | Media Partner: சுபாஷ் டிவி | Volunteers Support: பசுமை வலசை இயக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here