காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் கிடா வெட்டி படையலிட அனுமதி

2 ஆண்டுகளுக்கு பிறகு காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் கிடா வெட்டி படையலிட அனுமதிக்கப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சொரிமுத்து அய்யனார் கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றில் புனித நீராடவும், கோவிலில் கிடா வெட்டி படையலிடவும் வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர்.

ஊரடங்கு தளர்வில் கோவிலில் தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதி அளித்தாலும், முடி காணிக்கை செலுத்தவும், பொங்கலிடவும் மட்டுமே அனுமதித்தனர். கிடா வெட்டி படையலிட தடை விதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்ட நிலையில், சொரிமுத்து அய்யனார் கோவிலில் வழக்கம்போல் கிடா வெட்டி படையலிட்டு வழிபட அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சொரிமுத்து அய்யனார் கோவிலில் கிடா வெட்டி படையலிட்டு வழிபட 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

இதனால் திரளான பக்தர்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து, வணங்கினர். தொடர்ந்து பட்டவரையார் சாமிக்கு கிடா வெட்டி படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

இதையும் படிக்க: பண்பொழி திருமலை கோயிலுக்கு ரூ. 40 லட்சத்தில் 2 மினி பஸ்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here