தென்காசியில் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் வாய்புற்றுநோய் பரிசோதனை விழிப்புணர்வு முகாம்

தென்காசி போக்குவரத்து காவல்துறை, தென்காசி கேன்சர் சென்டர் மற்றும் ப்ரோவிஷன் கண் மருத்துவமனை இணைந்து, தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் 2023ஆம் ஆண்டிற்கான சாலை பாதுகாப்பு வார விழா இறுதி நாளான நேற்று இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் வாய் புற்றுநோய் பரிசோதனை, விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் துவக்கி வைத்தார். முகாமிற்கு தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு, தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன், தென்காசி வட்டார போக்குவரத்து பொறுப்பு அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தலைமை வகுத்து சிறப்புரை ஆற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் போலீசாரின் நடவடிக்கை அனைத்தும் பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியே நடைபெறுகிறது. எனவேதான் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கும் ஹெல்மெட் போடாத நபர்களுக்கும் அதிக சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளித்து விபத்து இல்லாத மாவட்டமாக தென்காசி திகழ ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேசினார்.

தென்காசி கேன்சர் சென்டர் நிறுவனர், மருத்துவர் .சிவச்சந்திரன், இயக்குநர் மருத்துவர் அருணா சந்திரசேகர், தென்காசி ப்ரோவிஷன் கண் மருத்துவமனை மருத்துவர் ராஜகுமாரி ஆகியோர் வாகன ஓட்டுனர்களுக்கு கண் பாதுகாப்பு மற்றும் வாய் புற்றுநோய்க்கு காரணமான புகையிலை, பான் குட்கா போன்ற பொருட்களை தவிர்ப்பது பற்றி உரையாற்றினார்.

பின்னர் இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்த காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தானும் முகாமில் கண் பரிசோதனை செய்து கொண்டார். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பற்றி தென்காசி வட்டார போக்குவரத்து பொறுப்பு அலுவலர் கண்ணன் உரையாற்றினார்.

மேலும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வாகன முன்விளக்கு பகுதியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி கேன்சர் சென்டர் நிர்வாக இயக்குனர் பாரதிராஜா, ப்ரோவிஷன் நிர்வாக இயக்குனர் நவீன், தென்காசி மெடிக்கல் சென்டர் பொது மேலாளர் திருமதி அகமது பாத்திமா மற்றும் குற்றாலம் மெட்ரோ ரோட்டரி கிளப் வழக்கறிஞர் சுப்பிரமணியன், மருத்துவர் ராஜ்குமாரி, முன்னாள் ரோட்டரி கவர்னர் முருகன் ராஜ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் 200க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. தென்காசி கேன்சர் சென்டர் நிறுவனர் மருத்துவர் சிவச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here