தென்காசி தனி மாவட்டமாக உதயமான பின் கடந்த 3 ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு சாரல் திருவிழா குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் நாளை (ஆக .5) முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்கிறது. இதில் நாள்தோறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெறுகின்றன.
இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ”குற்றாலம் பேரூராட்சி கலைவாணா் அரங்கத்தில் ஆக .5 ஆம் தேதி முதல் ஆக. 12 ஆம் தேதிவரை சாரல் திருவிழா நடைபெறுகிறது.
முதல் நாளான வெள்ளிக்கிழமை (ஆக.5) மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தொழில் மற்றும் தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் விழாவைத் தொடங்கி வைக்கின்றனா்.
விழா நடைபெறும் நாள்களில் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சா் டாக்டா் மா.மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினா்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிகள் ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.
தொடக்க விழா நாளன்று, பரத நாட்டியம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சி மற்றும் திரைப்பட நகைச்சுவை நடிகா் சூரி, நடிகை ரம்யா பாண்டியன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இரண்டாவது நாளன்று கொழு, கொழு குழந்தைகள் போட்டிகளும், நாய்கள் கண்காட்சியும் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் திரைப்பட நடிகை ரம்யா நம்பிஷன் கலந்துகொள்ளும் சென்னை லக்ஷ்மண் சுருதி இன்னிசை நிகழ்ச்சி, நடிகா் ஈரோடு மகேஷின் சிறப்பு நிகழ்ச்சி ஆகிய நடைபெறுகிறது.
மூன்றாவது நாளன்று பளு தூக்குதல், வலு தூக்குதல் மற்றும் ஆணழகன் போட்டிகளும், யோகா போட்டிகளும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய பாடகா் மற்றும் நடிகா் கானா பாலா, கலந்துகொள்ளும் நெல்லை வானவில் திரையிசைக் குழு வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.
நான்காவது நாளன்று பள்ளி மாணவா்களுக்கான பலவித போட்டிகளும், படகு போட்டிகளும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா கலந்துகொள்ளும் நெல்லை ஆனந்தராகம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஐந்தாவது நாளன்று சைக்கிள் மாரத்தன், வில்வித்தை மற்றும் பத்மஸ்ரீ கலைமாமணி நா்த்தகி நட்ராஜன் வழங்கும் செந்தமிழ் ஆடல் நிகழ்ச்சிகளும், கேரள மாநில கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
ஆறாவது நாளன்று கோலம், யோகாப் போட்டிகள், பல்வேறு இசை நிகழ்ச்சிகளுடன் கூடிய நாகா்கோவில் கீதம் இசைக்குழுவினரின் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
ஏழாவது நாளன்று மகளிா் மினி மாரத்தன், மேஜிக் விளக்கு அலங்காரப் போட்டிகள், பல்வேறு பள்ளி மாணவ, மாணவியரின் பல்சுவை மற்றும் கலை நிகழ்ச்சிகளும், கா்நாடக மாநில கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகளும், தப்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் காவடியாட்டம் , நகைச்சுவை நடிகா் மதுரைமுத்து குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
தொடா்ந்து, பாடகா் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி கலந்துகொள்ளும் நெல்லை கஸ்தூரி திலகம் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நிறைவு நாளன்று பழைய காா்கள் அணிவகுப்பு, கல்லூரி மாணவ, மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி மற்றும் திரைப்பட இயக்குநா் மற்றும் நடிகா் ரவிமரியா, பாடகா் வேல்முருகன் கலந்துகொள்ளும் சென்னை பரிமளாதேவி வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
எனவே, சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் அனைவரும் சாரல் திருவிழாவில் கலந்துகொண்டு அனைத்து கண்கவா் கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.
சாரல் விழாவுடன் உணவுத் திருவிழா, புத்தகத் திருவிழா, தோட்டக்கலை திருவிழா ஆகியவையும் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் 5 முதல் 12ஆம் தேதி வரை குற்றாலம் பராசக்தி கல்லூரி வளாகம் அருகில் உள்ள ஜமீன் பங்களா வளாகத்தில் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. ஆகஸ்ட் 5 முதல் 14ஆம் தேதி வரை குற்றாலம் பராசக்தி கல்லூரி வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. ஆகஸ்ட் 6 முதல் 8ஆம் தேதி வரை குற்றாலம் எக்கோ பார்க்கில் தோட்டக்கலை திருவிழா நடைபெறுகிறது.
நாய்கள் கண்காட்சி உங்கள் நாய்கள் இடம்பெற வேண்டுமா?
சாரல் திருவிழாவில் வருகிற 6-ந் தேதி மதியம் 2 மணி அளவில் நாய்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் நாய்களின் உரிமையாளர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் நாளை (வெள்ளிக்கிழமை) வரை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் தென்காசி தொடர்பு எண்- 04633 295744, கால்நடை மருத்துவமனை செங்கோட்டை டாக்டர், சிவகிரி கால்நடை மருத்துவமனை டாக்டர் , சங்கரன்கோவில் கால்நடை மருத்துவமனை டாக்டர் ஆகிய எண்களில் தங்களின் பெயரை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பதிவு செய்யலாம். பதிவு செய்ய தவறும் பட்சத்தில் உரிமையாளர்கள் நிகழ்ச்சியின் நாளன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.
இந்நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து குற்றால அருவிகளில் குளிக்க நான்காவது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க: குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளம்: நிலைகுலைந்த பெண்கள்.. இருவர் பலி – நடந்தது என்ன?