அதிகாலையில் எழுவதே வெற்றிக்கான முதல் படி
இன்றைய பெண்கள் பலருக்கு தங்களை கவனித்துக் கொள்வதற்கும், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதற்கும், வாழ்வில் மேம்படுவதற்கான செயல்களை செய்வதற்கும் ‘நேரமில்லை’ எனும் வார்த்தை தடையாக இருக்கிறது.
இவற்றையெல்லாம் தாண்டி சரியான திட்டமிடுதல், நேர நிர்வாகம், முயற்சி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு முன்னேறி இருக்கிறார் சித்ரா ரமேஷ். நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த இவர், குடும்பத்தை கவனித்துக் கொண்டு, வெவ்வேறு விதமான மூன்று தொழில்களை சிறப்பாக நடத்தி வருகிறார். அவரது பேட்டி..
உங்களைப் பற்றி சொல்லுங்கள்?
நான் பத்தாவது படித்திருக்கிறேன். கணவர் ரமேஷ், கல்லூரியில் படிக்கும் மகள், மேல்நிலைக் கல்வி பயிலும் மகன், இதுதான் எங்கள் குடும்பம், எனது கணவருடன் இணைந்து பாக்கு சிவல் உற்பத்தி செய்யும் நிறுவனம், மரச்செக்கு எண்ணெய் மில், காபி ஷாப் போன்றவற்றை நடத்தி வருகிறேன்.
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று தொழில்
களைத் தொடங்கும் எண்ணம் எப்படி வந்தது?
பாக்கு சீவல் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை முதலில் தொடங்கினோம். வீட்டு உபயோகத்திற்காக மரச் செக்கில் ஆட்டிய சுத்தமான எண்ணெய்யைத் தேடியபோது கிடைப்பது அரிதாக இருந்தது. அதன் காரணமாக, ‘ஏன் நாமே ஒரு மரச்செக்கு ஆலையைத் தொடங்கக் கூடாது? என தோன்றியதால், மரச்செக்கு எண்ணொய் மில்லைத் தொடங்கிளோம். சொத்து வாங்க முயற்சித்தபோது, சீர்காழி நகரில் ஒரு காபி ஷாப் விலைக்கு வந்தது. ஏற்கெனவே நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருந்த அந்த காபி ஷாப்பை நாமே நடத்தலாம் என்று முடிவெடுத்து நடத்தி வருகிறோம்.
தொழிலில் உள்ள சாதக, பாதகங்கள் என்னென்ன?
மற்றவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் அணு பவம் நமக்கு சாதகமானது. வாடிக்கையாளரின் எதிர் பார்ப்புகளை சரியான நேரத்தில் பூர்த்தி செய்வதே முக்கியம். அதுவே தொழிலின் வெற்றிக்கு சாதகமாக
அமைகிறது. சிறு தொழில்களில் நேரமின்மை மட்டும்தான் பாதகமானது. ஒரு வேலையைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டுமென்றால் தொழிலாளிகளை மட்டுமே நம்பினால் முடியாது. அதனால் முதலாளியே முதலில் தொழிலாளியாக இருக்க வேண்டும்.
குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, தொழில்களுக்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?
எனது வெற்றிக்கான காரணங்களில் முக்கிய மானது, ‘வைகறைத் துயிலெழு’ என்ற மூத்தோர் சொல்லை கடைப்பிடிப்பதுதான். தினமும் அதிகாலை நான்கரை மணிக்கே எழுந்து, வீட்டு வேலைகளை முடித்து விடுவேன். அதனால் எனக்குப் போதிய நேரம் கிடைக்கிறது. பிள்ளைகளும் உதவி செய்கிறார்கள்.
தொழில் முனைவோராக விரும்பும் பெண் களுக்கு உங்களின் அறிவுரை என்ன?
ஆண், பெண் பாகுபாடு சமூக அளவில்தான் இருக்கிறதே தவிர, ஆண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் பெண்களாலும் செய்ய முடியும். பெண்கள் சாதிப்பதற்கு வயதோ, படிப்போ ஒரு தடையில்லை. எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நம்பிக்கையோடும், புத்துணர்ச்சியான மனதோடும் சிந்தித்து செயலாற்றினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.