ஹெபடைடிஸ் எனும் ஆபத்து…
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28-ம் தேதி ஹெபடைடிஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் ஹெபடைடிஸ் நோயினால் 30 வினாடிக்கு ஒருவர் இறப்பதாகவும், 2030-ம் ஆண்டில் இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறும் எனவும் கூறுகிறது. ஹெபடைடிஸ் நோயை பற்றி விழிப் புணர்வு ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இந்த தினத்தில் பதாகைகள், விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுகின்றனர்.
ஹெபடைடிஸ் நோய் வைரஸ் தொற்றால் ஏற்படக் கூடியது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் கல்லீரலில் வீக்கம் உண்டாகும். உடல் சோர்வு, வெளிறிய நிறத்தில் மலம் வெளியேறுதல், பசியின்மை, எதிர்பாராத விதமாக எடை குறைதல், கண்கள், நகங்கள் மஞ்சள் நிறமாகக் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். இந்த நோய், ஹெபடைடிஸ் A, B, C, D, E என பலவகைப்படுகிறது. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு வீதத்தில் தொற்று ஏற்படுத்துகிறது.
ஹெபடைடிஸ் A – நோய் தொற்றால் பாதிக்கப் பட்டவரின் மலம், மாசுபடுத்தப்பட்ட உணவு, தண்ணீர் மூலம் பரவுகிறது.
ஹெபடைடிஸ் B – பாதிக்கப்பட்டவரின் உடல் சுரப்பிகளில் இருந்து பரவுகிறது. ரத்தம், விந்து போன்ற வற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது.
ஹெபடைடிஸ் C – பாதிக்கப்பட்டவருக்கு பயன்படுத்திய ஊசிகள், சவரக்கத்திகள் போன்றவற்றின்
மூலம் பரவுகிறது.
ஹெபடைடிஸ் D – இது டெல்டா ஹெபடைடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. மிகவும் அரிதானது. ஹெபடைடிஸ் B ஏற்பட்டவர்களுக்கு இந்த வகை தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது.
ஷெஹபடைடிஸ் E – மாசுபடுத்தப்பட்ட தண்ணீர் மூலம் பரவுகிறது.
தொற்றை கண்டறியும் முறை
ரத்த பரிசோதனை, கல்லீரல் பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்தும் தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறியலாம்.
சிகிச்சை முறைகள்
மருத்துவரை அணுகி, எந்த வகையான தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என தெரிந்து கொண்டு, அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளலாம்.
போதுமான ஓய்வு,ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அவசியமானவை.
தொற்று ஏற்பட்டதற்கான லேசான அறிகுறிகள் தெரியும் போதே, மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஹெபடைடிஸ் வைரஸ் தொற்று பரலாமல் இருக்க, குழந்தை பிறந்து 12-18 மாதங்களில் தடுப்பூசி போட வேண்டும்.