அழிந்துவரும் சிட்டுக் குருவிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு
மார்ச் 20ஆம் தேதி உலகெங்கும் சிட்டுகுருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த ஊர்வன பாதுகாவலர் ஷேக் உசேன் அழிந்து வரும் பறவை இனமான சிட்டுக் குருவிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு அவைகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். சிட்டுக் குருவிகளை பற்றி ஷேக் உசேனிடம் கேட்ட போது, ”சிட்டுக்குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும் பறவையினத்தைச் சேர்ந்தவை. இந்தியாவில் இவை வீட்டுக் குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க்குருவிகள் என அழைக்கப்படுகின்றன. மனிதனுக்கு நன்கு அறிமுகமான இந்த பறவைகள் தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். மூன்று முதல் ஐந்து முட்டைகள் இடும். ஆண், பெண் இரண்டுமே அடைகாத்து குஞ்சுகளை வளர்க்கின்றன. குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன. பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.
நாம் ஏற்படுத்தும் பல இழப்புகளால் மரங்களும் பறவைகளும் உலகெங்கும் அழிந்து வருவதால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு உலகம் வெப்பமயமாகி இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுகின்றன. தற்போது பல நகர்ப்புறங்களில் இவை முற்றிலுமாக அழிந்துவிட்டன. அலைபேசியில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகளின் தாக்கம் குருவியினத்தின் இனப்பெருக்க மண்டலத்தை தாக்கி அவற்றை மலடாக மாற்றி விடுவதனால், இவற்றால் தங்களின் இனத்தை பெருக்க இயலவில்லை என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
இதனால் குருவியினங்களை பாதுகாக்க வேண்டி, சர்வதேச உலக சிட்டுக்குருவி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 தேதி கடைபிடிக்கப்படுகிறது” என்றார்.
ஷேக் உசேன் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சென்று சிட்டுக் குருவிகளை பாதுகாக்க குருவிகளை பற்றி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்லால் சிட்டு குருவிகளுக்கு எவ்வாறு செயற்கை கூடு செய்வது என்பது பற்றிய விளக்கத்தையும் கொண்டு செல்கிறார். கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், பறவைகளுக்கு மனிதர்களைப் போலவே நிழல்களும், தண்ணீரும், உணவும் தேவைப்படுகிறது. எனவே ஒவ்வொரும் உங்கள் வீடு தேடி வரும் சிட்டுகுருவிகளுக்கு தண்ணீர், தானியங்கள் வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் ஷேக் உசேன்.
இதையும் படிக்கலாம்: திருவள்ளூர் துணை கலெக்டராக பதவி வகிக்கும் தென்காசி பெண்