கடந்த சில ஆண்டுகளாக வானிலை சார்ந்த விஷயங்களை அறிந்துகொள்வதில் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வம் உண்டாகியிருக்கிறது. தொடர்ச்சியாக ஏற்பட்ட புயல், மழை, வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்கள்தான் அதற்குக் காரணம்.
எனவே வானிலை சார்ந்த நுட்பமான தகவல்களை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் Tenkasi Life சார்பில், சட்டென்று மாறுது வானிலை… அனுபவிக்க வேண்டுமா? அச்சப்பட வேண்டுமா? என்றொரு நிகழ்ச்சி, தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் உள்ள ஜெ.பி.பொறியியல் கல்லூரியில் 16 டிசம்பர் 2023 சனிக்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டிந்தது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ‘தென்காசி வெதர்மேன்’ ராஜா, வானிலை தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். புயல் எப்படி உருவாகிறது? காற்றழுத்த தாழ்வு நிலை என்றால் என்ன..? மழை எவ்வாறு சென்டிமீட்டரில் அளவிடப்படுகிறது? வெப்பச்சலனம் என்றால் என்ன? வானிலை முன்னறிவிப்பை எப்படி கணிக்கிறார்கள்? வானிலைக்கும் காலநிலைக்கும் உள்ள வேறுபாடு என்ன..? வானிலையை முன்கூட்டியே கணித்துச் சொல்வதில் உள்ள சவால்கள் என்ன? வானிலை சார்ந்த படிப்புகள் என்னென்ன..? என மாணவர்கள் ஆர்வத்துடன் எழுப்பிய கேள்விகளுக்கு ராஜா பதிலளித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜெ.பி.பொறியியல் கல்லூரியின் உதவி பேராசிரியர் அய்யப்பன், Tenkasi Life பேஜின் தலைமை நிர்வாகி ஜஸ்டின் துரை, நசீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி அட்மின் ஹேம்லெட் சிஸ்டர் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர்.ராஜ்குமார் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தனர்.