பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருவிகளில் நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அகஸ்தியர் அருவியும் ஒன்றாகும். இ்ந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருப்பதால் உள்ளூர் மட்டுமன்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், கோடை காலங்களில் இங்கு படையெடுத்து வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று மே 1-ந் தேதி அரசு விடுமுறை என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், “அகஸ்தியர் அருவியில் குளிப்பது எங்களுக்கு ஆனந்தமாக உள்ளது. கோடை காலத்தில் வேறு எங்கும் தண்ணீர் இல்லாததால் இங்கு வரும் அனைவரும் ஏமாற்றம் அடையாமல் குளித்துச் செல்லும்படி உள்ளதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றனர்.
பாபநாசம் சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகள், வனத்துறையினர் வாக்குவாதம்
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வனத்துறையினர் அனுமதி அளித்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஒரு வேனில் சுற்றுலா பயணிகள் மாலை 3 மணிக்கு பிறகு வந்தனர். ஆனால் நேரம் ஆனதால் பாபநாசம் வனசோதனை சாவடியில் வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் சுற்றுலா பயணிகளுக்கும், வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகளை திரும்பிச் சென்றனர்.
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் வெயில் அடித்து வருகிறது. தென்காசி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காற்று வீசி வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாக காணப்படுகிறது.
இந்த நிலையில் பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் சற்று அதிகமாக விழுகிறது. எனவே இங்கு சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மெயின் அருவியில் தண்ணீர் ஆண்கள் குளிக்கும் பகுதியில் குறைவாக விழுகிறது. பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் இல்லை. எனவே ஆண்களும், பெண்களும் ஆண்கள் குளிக்கும் பகுதியிலேயே குளித்து சென்றனர். ஜூன் மாதத்தில் சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.