பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்ததை படத்தில் காணலாம்.
21 மாதங்களுக்கு பிறகு பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் பாபநாசம் அகஸ்தியர் அருவியும் ஒன்றாகும். இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இதில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்த பகுதி வியாபாரிகள், ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் காரணமாக ஏராளமான சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டது. இதில் சமீபத்தில் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அகஸ்தியர் அருவியிலும் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் 21 மாதங்களுக்கு பிறகு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பில் நேற்று முதல் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இந்த அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் நேற்று அருவியில் குவிந்தனர். தண்ணீர் நன்றாக விழுந்ததால் அதில் அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
மணிமுத்தாறு அருவி
இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்றொரு பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் கடந்த 21 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதை அறிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க திரண்டனர்.
ஆனால் சமீபத்தில் பெய்த மழையால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் அருவியை மட்டும் பார்த்து சென்றனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.