பாபநாசம் பாணதீர்த்தம் அருவியை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு வருகிற 18ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அணைக்கு மேலே பிரசித்தி பெற்ற பாணதீர்த்தம் அருவி உள்ளது. தாமிரபரணி ஆறு ஆனது மலையிலிருந்து வெளியே தலை காட்டும் இடம்தான், பாண தீர்த்தம். இந்த அருவி காரையாறு அணைக்கு மேலே இருக்கிறது. ’ரோஜா’ படத்தின் ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் உள்ளிட்ட பல சினிமா படப்பிடிப்புகள் இங்கு நடைபெற்றிருக்கிறது. இந்த அருவியில் குளிக்க முன்பு அனுமதி இருந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக குளித்து வந்தனர். அகத்தியர் இங்கே நீராடியதாகவும் ராமபிரான் தனது தந்தையான தசரதருக்கு இங்கேதான் இறுதிச் சடங்கு செய்து, திதி கொடுத்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக பக்தர்கள் புனித நீராடி விட்டு தீர்த்தம் எடுத்து வரும் வழக்கமும் இருந்தது.
இதற்காக பாபநாசம் அணையில் தனியார் படகுகள் இயக்கப்பட்டு வந்தன. அருவிக்கு செல்பவர்கள் கட்டணம் செலுத்தி படகுகளில் சவாரி செய்து, அருவிக்கு சென்று குளித்து வந்தனர். பின்னர் பல்வேறு காரணங்களால் அருவிக்கு செல்ல சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து படகுகளும் அணையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.
9 ஆண்டுகளுக்கு பின் அனுமதி
இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு பின்னர் பாபநாசம் அணைக்கு மேல் உள்ள பாணதீர்த்த அருவியை பார்க்க வனத்துறை அனுமதி அளித்து உள்ளது. இது வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முண்டந்துறை வனத்துறை அலுவலகத்தில் கட்டணத்தை செலுத்தி நுழைவுச் சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் அங்கிருந்து 10 பேர் அமர வசதியுள்ள வாகனத்தில் அழைத்துக்கொண்டு, 12 கிலோ மீட்டர் தூரம் வரை அணையின் பக்கவாட்டு வழியாக ‘வியூ பாயிண்ட்’ வரை அழைத்து சென்று பார்வையிட செய்வார்கள்.
அங்கு சுற்றுலா பயணிகள் அருவியின் அழகை பார்த்து ரசித்த பின்னர், மீண்டும் அதே வாகனத்தில் முண்டந்துறை வன அலுவலகத்தில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் அருவியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அம்பை வன கோட்ட துணை இயக்குனர் செண்பகப் பிரியா தெரிவித்து உள்ளார்.
குளிக்க அனுமதியில்லை
மேலும் காரில் இருந்தவரே பாணதீர்த்த அருவியை பார்வையிட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படகில் சென்று பார்ப்பதற்கு அனுமதி இல்லை. அதேசமயம் அருவிக்கு அருகில் செல்லவோ அருவியில் குளிக்கவோ தொடர்ந்து தடை நீடிக்கிறது. அருவிக்கு அருகில் செல்ல வேண்டுமென்றால் காரையார் அணையை கடந்து தான் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
9 ஆண்டுகளுக்கு பின்னர் அருவியை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.