பாபநாசம் மலைப்பாதையில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து தூய்மைப்படுத்திய மாணவர்கள்

பாபநாசம் சோதனைச் சாவடி முதல் அகஸ்தியர் அருவி வரையிலான சாலையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து தூய்மைப்படுத்தினர் திருவள்ளுவர் கல்லூரி மாணவர்கள்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் செந்தில் குமார் உத்தரவின்படியும், சூழல் மேம்பாட்டு அலுவலர் அன்பு அறிவுறுத்தலின்படியும் சூழல் மேம்பாட்டுக் கோட்டத்தின் திருக்குறுங்குடி, களக்காடு, அம்பாசமுத்திரம், பாபநாசம் ஆகிய நான்கு சூழல் சரகங்களின் உதவி வனஉயிரினக் காப்பாளர்களின் பங்கேற்புடனும், அரும்புகள் அறக்கட்டளை மற்றும் ATREE தொண்டு நிறுவனம் ஆகியோருடன் இணைந்து உலக சுற்றுச் சூழல் தினம் 2022 குறித்த விழிப்புணர்வு நிகழ்வு பாபநாசம் சோதனைச் சாவடியில் காலை 7.30 மணிக்கு துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருவள்ளுவர் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் அண்ணாதுரை மற்றும் வரலெட்சுமி, கிராம வனக்குழுக்களின் சேர்மன்கள் சூழல் மேம்பாட்டுக் கோட்ட வனப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பங்கேற்பாளர்கள் அனைவரும் பாபநாசம் சோதனைச் சாவடி முதல் அகஸ்தியர் அருவி வரையிலான சாலையில் மலையேற்ற நடைப்பயணமாகச் சென்று சாலையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை சேகரம் செய்தனர். பின்னர் அகஸ்தியர் அருவிப் பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் துணிக் கழிவுகள் ஆகியவற்றை சேகரம் செய்ததுடன் அருவிப் பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகளையும் செய்து முடித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் இராஜ. மதிவாணன் அவர்களால் உலக சுற்றுச் சூழல் தினம் 2022 குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி வாசிக்கப்பட்டு, அனைவராலும் உறுதி மொழி ஏற்கப்பட்டது. திருக்குறுங்குடி சூழல் வனவர் அப்துல் ரஹ்மான் வரவேற்புரையாற்றினார். பாபநாசம் சூழல் சரகத்தின் உதவி வன உயிரினக் காப்பாளர் பாரத் வாழ்த்துரை வழங்கினார். திருக்குறுங்குடி சூழல் சரகத்தின் உதவி வன உயிரினக் காப்பாளர்கள் யோகேஸ்வரன் மலையேற்ற நடைப் பயணத்தை துவக்கி வைத்தார். களக்காடு சூழல் வனவர் சிவக்குமார் அவர்களால் உலக சுற்றுச சூழல் தினம் 2022 குறித்த விழிப்புணர்வு உரை வழங்கப்பட்டது. விழிப்புணர்வு பணிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீருடன் கூடிய சிற்றுண்டி வழங்கப்பட்டது. இவ்விழிப்புணர்வு நிகழ்வுகள் அம்பாசமுத்திரம் மற்றும் பாபநாசம் சூழல் சரகத்தின் வனவர் மோகன்தாஸ் அவர்களால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது.

மேலும் சூழல் மேம்பாட்டுக் கோட்ட நெல்லை அலுவலகப் பணியாளர்கள் உட்பட நான்கு சூழல் சரகத்தின் அனைத்து தன்னார்வலர்களும் கலந்து கொண்டார்கள். நிகழ்வின் இறுதியில் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் தலைமையில் துணை இயக்குநர் மற்றும் வன உயிரினக் காப்பாளர், அம்பாசமுத்திரம் அவர்களால் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சப்பை வழங்கும் விழாவில் சூழல் மேம்பாட்டுக் கோட்டப் பணியாளர்களும் கிராம வனக்குழுக்களின் சேர்மன்களும் கலந்து கொண்டார்கள்.

இதையும் படிக்கலாம்: வனப்பகுதிக்குள் திசை தெரியாமல் அலைந்த பெண் – வினோத செடி உரசியதால் வழிதவறி சென்றதாக தகவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here