அதே அமைதி, அதே பிரமிப்பு, அதே ஏகாந்தம் – தென்காசி பெரிய கோவில் பயணம்

வெகுநாட்களுக்குப் பின் தென்காசி பெரிய கோவிலுக்குப் போக வேண்டும் போல் இருந்தது. வாழ்க்கையின் ஒவ்வொரு பிரம்மாண்டகளும் பிரம்மிப்புகளும், நாளுக்குள் நாள் அதன் அளவில் குறைந்து கொண்டே இருக்க, பெரிய கோவில் மட்டும் அப்படியே இருக்கிறது. அதே அமைதி, அதே பிரமிப்பு. அதே ஏகாந்தம்.

முன்பெல்லாம் காரணமே இல்லாமல் இந்தக் கோவிலுக்குச் சென்று வருவேன். கோவிலுக்குச் சென்று வர காரணம் தேவையா என்ன?

பரம கல்யாணியில் படித்த வரையிலும் வாரத்தின் இருநாட்கள் நிச்சயமாய் விஸ்வநாதரைப் பார்த்தாக வேண்டும். முத்தையா சாரிடம் ஸ்போக்கன் இங்கிலீஷ் சேர்ந்தாலும் சேர்ந்தோம். சரியாக கோபுர வாசலுக்கு அருகிலேயே டியூஷன் சென்டரைப் பிடித்திருந்தார். முத்தையா சார் எந்தளவுக்கு நாத்திகம் பேசுவாரோ, அந்த அளவுக்கு சிவபக்தரும் கூட. பெரிய கோவிலின் சிற்பக் கலைகள் குறித்தும், பராக்கிரமப் பாண்டியனின் கலை சிந்தனைகள் குறித்தும், பொதிகை சித்தர்கள் குறித்தும் அவர் பேச கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

பிற்காலப் பாண்டியர்களில் ஒருவரான பராக்கிரமப் பாண்டியனுக்குப் பின், இத்தனைக் கலை நுட்பத்துடன் கட்டப்பட்ட கோவில்கள் எதுவும் தமிழகத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. மூன்று புறமும் மலைகள் சூழ, அதன் மையமாய் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதனுக்கும் அவன் மூலமாக எங்களுக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்திருக்கிறது. கோவிலால் நிறைந்த ஊர் தென்காசி என்பதில் எப்போதும் எங்களுக்குப் பெருமை உண்டு. கோவிலைச் சுற்றித்தான் ஒட்டுமொத்த ஊரும். ஊரின் வேர் இந்த இடங்களில் தான் மிக வலுவாக ஊன்றபட்டு இருக்கிறது.

அந்த நாட்களில் பெரிய கோவிலை உலகம்மன் கோவில் என்று தான் சொல்வோம். விபரம் தெரிய ஆரம்பித்த நாட்களில் இந்தக் கோவிலின் முதல் பெயர் காசி விஸ்வநாதர் கோவில் என்பதை ஏற்றுக்கொள்வதற்குச் சற்றே சிரமமாக இருந்தது. இன்றைக்கும் யாரேனும் ஒருவர் மூலமாக உலகம்மன் கோவில் என்றழைக்கப்படும் போது உள்ளுக்குள் எதோ ஓர் இனம் புரியா சந்தோஷம் எழுவதைக் கண்டுகொள்ள முடிகிறது.

பெரிய கோவிலைச் சுற்றி எழும்பி வீசும் காற்றின் அருமையை அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்குத் தகுந்த மாதம் ஆடி தான். அடித்து வீசுகின்ற அந்தக் காற்றில் கோபுரத்தின் நுழைவாயில் அத்தனை கம்பீரமாக நம்மை வரவேற்கும். கோபுரத்தைக் கடந்ததும் ஒரு சிறிய புல்வெளி உண்டு. என்னுடைய சிறுவயது நாட்கள் மிகப் பசுமையாக நினைவில் இருப்பது இந்தப் புல்வெளியைச் சுற்றித்தான். எப்போதும் ஈரமாக இருக்கும் அந்தப் புல்வெளிதான் எங்களுக்கான மைதானமாக இருந்தது.

மெரினா பீச்சில் அமர்ந்து காற்று வாங்குவதைப் போல, கோவில் வாசலில் அமர்ந்து காற்று வாங்குவதற்கென்றே ஒரு கூட்டம் வரும். ஒரு கட்டத்தில் பட்டாணி சுண்டல். பால் பாயாசம் வரைக்கும் விற்கத் தொடங்கினார்கள். புல்வெளியில் அமர்ந்து கொண்டு சாப்பிட்ட கோவில் பனியாரமும் ரவா லட்டும் இன்றைக்கும் அந்த வாசத்தை எழுப்பிக்கொண்டுதான் இருக்கின்றன.

மிகச் சரியாகச் சொல்வதென்றால், சிறுவயதில் இருந்து இப்போது வரைக்கும் நான் பார்த்த எந்தக் காட்சிகளும் மாறாமல் அத்தனையும் அப்படியேத் தான் இருக்கின்றன. எல்லாமும் அதனதன் இடத்தில் பொருந்தி நின்று அப்படியே வேலை செய்வதைப் போல. சரியாக சொல்வதென்றால் கோபுர வாசலின் அருகே ஒரு பெரியவர் பால்கோவா விற்றுக்கொண்டிருப்பார், அவரைத் தவிர எல்லாமும் அதனதன் இடத்தில் அப்படியேத் தான் இருக்கின்றன.

ஊரில் எது மாறினாலும் கோவில் மட்டும் அப்படியே இருக்கிறது. அதே பிரம்மாண்டத்துடன், அதே பூரணத்துடன். நாங்கள் ஆசீர்வதிக்கபட்டவர்கள்.

எழுத்து: Srinivasan Balakrishnan

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here