மெயின் அருவியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெள்ளம் ஆர்ப்பரித்தது. அருவியின் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டியதால் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவசரமாக வெளியேறி வந்தார்கள்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் சீசன் இந்த ஆண்டும் தொடங்கியதால் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக வெளியூர்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள்.
பொதுவாக அருவிகளில் கூடுதலாக தண்ணீர் வரும்போது சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு காவல்துறையினர் தடை விதிப்பது வழக்கம். இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்பகுதியில் இன்று மாலை திடீரென்று கனமழை பெய்ததால், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீரின் நிறம் மஞ்சளாக இருக்கும் அளவுக்கு மண் கலந்த நீர் வந்தது. அதில், மரக்கட்டைகள், சிறிய பாறைகள் அடித்து வரப்பட்டதால் குளித்துக் கொண்டிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினார்கள்.
மெயின் அருவியில் பொதுமக்கள் குளித்துக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பார்க்காத வகையில் வெள்ளம் ஆர்ப்பரித்தது. அருவியின் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டியதால் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவசரமாக வெளியேறி வந்தார்கள். அப்போது வெள்ள நீரில் நான்கு சுற்றுலாப் பயணிகள் அடித்துச் செல்லப்பட்டனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்க தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் முயற்சிகளை மேற்கொண்டனர். அதில் இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருப்பினும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுற்றுலா வந்த இருவரும் வெள்ளத்தில் சிக்கி பலியானதால் அவர்களுடன் வந்திருந்த குடும்பத்தினரும் உறவினர்களும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தென்காசி மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், ”குற்றாலம் மெயின் அருவியில் இன்று மாலை 4 மணி அளவில் திடீரென பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அங்கே குளித்துக் கொண்டிருந்த பண்ருட்டியை சேர்ந்த கலாவதி (வயது 55), சென்னையை சேர்ந்த மல்லிகா (வயது 46) ஆகியோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். குற்றாலம் பேரருவியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உரிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதும் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் தீயணைப்பு துறையினரால் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கிட தென்காசி வருவாய் வட்டாட்சியர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்
குற்றாலத்தில் நாளை தடை
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை (ஜூலை 28) குற்றாலத்திற்கு வருகை தர வேண்டாம் தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.