மேக்கரையில் தனியாா் அருவிகள் அகற்றும் பணி தொடக்கம்

மேக்கரையில் தனியாா் அருவிகள் அகற்றும் பணி தொடக்கம்

தென்காசி மாவட்டம்  மேக்கரையில் விதிமுறைகளை மீறி செயற்கையாக உருவாக்கப்பட்ட அருவிகளை இடித்து அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகும் பல நீரோடைகள் மேக்கரை கிராமம் வழியாக பாய்ந்தோடுகிறது. இதன்மூலம் அடவிநயினார் அணை மற்றும் பண்பொழி, இலத்தூர், சீவநல்லூர், கரிசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் கிடைத்து, விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேக்கரையில் திருவாவடுதுறை ஆதீன மடத்துக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கா் நிலங்களை நீண்ட கால குத்தகை அடிப்படையில் பெற்று பலா் தோப்புகள் அமைத்தும், விவசாயம் செய்தும் வருகின்றனா். இந்த நிலையில் மேக்கரை பகுதியில் நீரோடைகளை மறித்து சில தனிநபர்கள் தடுப்பணை போல் அமைத்து, அதில் நீர்வீழ்ச்சிகள் போல் உருவாக்கி சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்து கட்டணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்தது. குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த காலங்களில் இந்த அருவிகளில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்தது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், பண்பொழி, வடகரை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சிலர் கலெக்டரிடம் எடுத்துக் கூறினர். இதையடுத்து தனியாா் அருவிகளை ஒழுங்குபடுத்துமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. தென்காசி உதவி கலெக்டர் கங்காதேவி தலைமையிலான குழுவினர் மேக்கரை பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது நீரோடைகளில் ஆக்கிரமிப்பு செய்து 30-க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகளை கட்டியது கண்டுபிடிக்கப்பட்டு, அதுதொடர்பான அறிக்கை கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் நீர்வளத்துறை சார்பில், நீரோடை ஆக்கிரமிப்புகளை 15 நாட்களுக்குள் அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட காலஅவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதைத்தொடர்ந்து செங்கோட்டை தாசில்தார் கந்தசாமி தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. பொக்லைன் எந்திரம் மூலம் சில ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர். சில ஆக்கிரமிப்புகள் அணை போல் உறுதியாக கட்டப்பட்டு இருப்பதால் அவற்றை வெடி வைத்து தகர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி, இன்ஸ்பெக்டர்கள் வேல்கனி (அச்சன்புதூர்), சியாம் சுந்தரம் (குற்றாலம்), சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லையா (அச்சன்புதூர்), தர்மராஜ் (எலத்தூர்)ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து ஆட்சியா் ப.ஆகாஷிடம் கேட்டபோது, மேக்கரை பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக 9 தனியாா் அருவிகள் உள்ளது தெரியவந்தது. பட்டா உரிமையாளா்களாகவே இருந்தாலும் தண்ணீா் செல்லும் பாதையை திசை திருப்புவது, செயற்கையாக நீா்வீழ்ச்சியை உருவாக்குவது விதிமீறலாகும். இதுகுறித்து விளக்கமளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்ததால் தனியாா் அருவிகள் அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளது. செங்கோட்டை குண்டாறு பகுதியிலும் தனியாா் அருவிகள் உள்ளன. அதுகுறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மேக்கரையில் சுமாா் 25 செயற்கை அருவிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை அனைத்தும் படிப்படியாக அகற்றப்படும் என்றனா்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here