ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவு, நார்ச்சத்து குறைவான உணவு, போதிய தண்ணீர் அருந்தாதது, அன்றாட உணவில் காய்கறி, கீரை. பழங்களைச் சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படக்கூடும். அதற்கான தீர்வாக தினமும் காலை, மாலை இரு வேளையும் பாதாங்குஸ்தாசனம் என்ற ஆசனத்தைச் செய்யலாம். மருத்துவரின் ஆலோ சனையுடன் இந்த பயிற்சியை மேற்கொள்வது நல்லது.
அஷ்டாங்க யோகம் என்ற இந்திய பாரம்பரிய யோகக்கலையில் குறிப்பிடத்தக்க ஆசனமாக உள்ள இந்த முறையில் உபய பாதாங்குஸ்தாசனம், உத்திட்ட ஹஸ்த பாதாங்குஸ்தாசனம். சுப்த பாதாங்குஸ்தாசனம், பரிவருத்த ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் மற்றும் ஏக பாத பாதாங் குஸ்தாசனம் போன்ற வகைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன. அவற்றில் பொதுவான ஒரு முறையை இங்கே காணலாம்.
பாதம் என்பது கால் என்றும், அங்குஸ்தம் என்பது கட்டை விரல் என்றும் பொருள்படும்.
செய்முறை:
தலை மற்றும் முதுகுத்தண்டு ஆகியவை நேராக இருப்பதுபோல நன்றாக நிமிர்ந்து நின்ற நிலையில், கைகளை தலைக்கு மேல் தூக்கியவாறே கீழே குனிய வேண்டும். கை விரல்கள், கால் பெருவிரலைத் தொடும்படி நன்றாக குனிந்த நிலையில் 10 முதல் 20 வினாடிகள் இருக்க வேண்டும். அந்த நிலையில், கால் முட்டி மடங்கிவிடாமல் இருப்பது அவசியம். குனியும் போது மூச்சை வெளிவிட வேண்டும். மேலே நிமிரும்போது மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.
நின்ற நிலையில் செய்ய முடியாதவர்கள் இந்த ஆசனத்தை அமர்ந்த நிலையிலும் செய்யலாம். தரையில் ஒரு விரிப்பின் மீது நிமிர்ந்து உட்கார்ந்து, காலை நேராக நீட்டவும். மெதுவாக, மூச்சை வெளி விட்டவாறே உடலை முன்புறமாக வளைத்து, கை விரல்கள். கால் பெருவிரலை தொடும்படி குனியவும். சில வினாடிகள் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு வரவும். மேற்கண்ட இரு முறைகளிலும் ஆசனத்தை செய்யும் போது மூச்சை அடக்கி விடாமல், நிதானமாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும்.
பலன்கள்
தொடர்ந்து செய்யும்போது தொடைகள் உறுதியாவதுடன், இடுப்பு எலும்பு வலுவாகி, பின்புறத் தோற்றத்தை சீராக்குகிறது.
வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகளை போக்குகிறது. உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, நாளமில்லா சுரப்பிகளையும் சீராக செயல்பட ஊக்குவிக்கிறது.
தூக்கமின்மை பிரச்சினை, கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதுடன், இனப்பெருக்க உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கும் உதவும்.
சிறுநீரகம், கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்ற உடலின் உள் உறுப்புகளின் தடையில்லா செயல்பாட்டுக்கும் இந்த ஆசனம் உதவுகிறது. •