மலையோரக் கிராமங்களுக்குள் யானைகள் புகுந்து, பயிர்களையும் உயிர்களையும் நாசமாக்கி வருவது அண்மைக்காலத்தில் அதிகமாகிவிட்டது. யானைகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள மின்சார வேலிகள் அமைப்பது, மலைத் தொடர்களில் வழக்கமாகி வருகிறது.
யானைகள் விளைநிலங்களுக்குள்ளும், வாழ்விடங்களுக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்தது. நம் நாட்டில் மட்டும் உள்ள பிரச்சினை அல்ல இலங்கையிலும் உண்டு. இலங்கையில் யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதலை தடுக்க மின்சார வேலிகளோடு கூடுதலாக சணல் செடியில் வேலிகள் அமைப்பதற்கு அந்நாட்டின் வன விலங்குகள் அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
ஏன் சணல் செடிகள்?
சணல் செடி வளர்த்தல், பனைமரங்களை நடுதல் எக்ஸ்சோரா எனப்படும் ஒரு வகைச் செடிகளை நடுதல் என மூன்று முறைகளில் யானைகளைக் கட்டுப்படுத்தலாம். இவற்றில் குறைந்த பராமரிப்புச் செலவு, குறுகிய காலத்தில் கிடைக்கும் பயன், ஆகியவற்றை கருத்தில் கொண்டு சணல் செடி வேலியே பொருத்தமானதாக உள்ளது என்று அந்த அமைச்சகம் தீர்மானித்திருக்கிறது.
சணல் எப்படி யானைகளைக் கட்டுப்படுத்தும்?
சணல் செடிகளின் நுனிப்பகுதிகளைபார்த்துப் பார்த்து யானைகள் அச்சம் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விடுமாம். தான்சானியா உட்பட சில நாடுகள் யானைகளிடமிருந்து பயிர்களைக் காக்க சணல் செடிகளை வேலிகளாகப் பயிரிட்டு வெற்றி கண்டிருக்கின்றன. இதேபாணியை இப்போது இலங்கையும் பின்பற்ற இருக்கிறது.
சீனா இந்த சணல் தாவரங்களைத் தனது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரைவாக வளர்த்து, தனது செலவில் சாகுபடி செய்து இலங்கைக்கு அனுப்ப முன்வந்திருக்கிறது. இலங்கையில் கால் பதிக்க விரும்பும் சீனாவின் இன்னொரு முயற்சியாக இது இருக்கலாம்.
ஆனால், இதை ஏன் தமிழக அரசு, நம்மலையோர வனப்பகுதிகளில் முயற்சித்துப் பார்க்ககூடாது? இதன் மூலம் ஒருபுறம் யானைகளை கட்டுப்படுத்த முடியும் இன்னொருபுறம் வனப்பகுதிகளை ஒட்டி வாழும் குடும்பங்களின் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். ஏன் கூடாதா?