தொட்டில் யோகா
குழந்தைகளாக இருந்தபோது அம்மாவின் புடவை யில் தொட்டில் கட்டி விளையாடி இருப்போம். காற்றில் அசையும் தொட்டிலோடு, நாமும் அசைந்து ஆடி மகிழ்ந்திருப்போம். தற்போது அதே தொட்டிலைக் கொண்டு ‘யோகா’ பயிற்சி செய்து வருகிறார்கள். ஆங்கிலத்தில் ‘ஆன்ட்டி கிராவிட்டி’ எனும் இந்தப் பயிற்சியை, அழகு தமிழில் ‘தொட்டில் யோகா’ என்கிறோம். பிபாஷா பாசு, ஆலியா பட், ரகுல் பிரீத் சிங், சமந்தா போன்ற திரை உலக பிரபலங்களின் தற்போதைய பிட்னஸ் முயற்சியாக இருப்பது ‘தொட்டில் யோகா’.
தலை முதல் கால் வரை பல நன்மைகளைக் கொடுக்கக் கூடிய இந்தப் பயிற்சியை எளிதாகவும், சுலபமாகவும் செய்யலாம். ‘தொட்டில் யோகா’ பற்றி பெங்களூருவைச் சேர்ந்த யோகா ஆசிரியர் ஷாலினி கூறுகிறார்.
“யோகாவில் காலில் அழுத்தம் கொடுத்து செய்யும் பயிற்சிகள் சிரமமானது. அதனாலேயே யோகா கற்கும்பலரும் அந்த பயிற்சிகளைத் தொடருவது இல்லை.
அவர்களுக்கெல்லாம் வரப்பிரசாதமாக அமைந்திருப்பது ‘தொட்டில் யோகா’. தரையின் மீது செய்யும் அனைத்து யோகா பயிற்சிகளையும், ‘தொட்டில் யோகா’ முறையில் செய்யலாம். சிரமமின்றி எளிதாக ரசித்தபடியே இந்த யோகாவைச் செய்வதால், உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
“தொட்டில் யோகா’ பயிற்சிகளை மேற்கொள்வதால் ரத்த ஓட்டம் சீராகும், முதுகுவலி பிரச்சினை
உள்ளவர்களும் இந்த யோகாவைச் செய்யலாம். இதனால் வலி குறையும், முதுகுப் பகுதியில் உள்ள முக்கியமான தசைகள் வலுவடைவதால் முதுகெலும்பு, தோள் பட்டை போன்றவற்றின் நெகிழ்வுதன்மையை மேம்படுத்த முடியும்.
‘தொட்டில் யோகா’வில், பலவித அசைவுகள் இருப்பதால், ஜீரண உறுப்புகள் சீராகச் செயல்படும். இதன் மூலம், ஜீரன கோளாறுகள் குணமாகும். மலச்சிக்கல் பிரச் சினைக்குத் தீர்வு கிடைக்கும். இன்றைய காலக்கட்டத்தில், பலரும் ஒரே இடத்தில் உடல் அசையாமல் அமர்ந்து பல மணி நேரம் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கான சிறந்த பயிற்சியாக ‘தொட்டில் யோகா’ அமைகிறது.
இதில், பல அசைவுகள், நகர்வுகள் மேற்கொள்ளப்ப படுகின்றன. இதனால், உடலின் வளைவுத்தன்மை அதிகரிக்கும். 16 வயது முதல் 55 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். உயர் ரத்த அழுத்தம், இதயப் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி பயிற்சிகளை மேற் கொள்ளலாம்” என்கிறார் டாக்டர் ஷாலினி.
‘தொட்டில் யோகா’ பயிற்சி செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைப் பற்றி கூறும்போது, “எந்த யோகா செய்வதாக இருந்தாலும், உடல் இலகுவாக் இருக்க வேண்டும். தொட்டில் யோகாவிலும் இதே வழிமுறைதான் பின்பற்றப்படுகிறது. பயிற்சி செய்வதற்கு முன்பு திட உணவை சாப்பிடக் கூடாது. முடிந்தவரை பழச்சாறு, தண்ணீர் அருந்துவது சிறந்தது. அவசர கதியில் பயிற்சி செய்யாமல், நிதானமாகச் செய்தால் மனம் இலகுவாகும்.
தளர்வான ஆடைகள் அணியாமல், உடலுக்கு ஏற்ற சற்றே இறுக்கமான ஆடைகளை அணியலாம். தொட்டில் யோகாவை செய்வதற்கு முன் சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. இதன் அடிப்படைகளைத் தெரிந்து கொண்டால், வீட்டிலேயே பயிற்சி செய்யலாம்” என்கிறார் டாக்டர் ஷாலினி.