தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளரக்கூடிய மூலிகைச்செடி அம்மான் பச்சரிசி, ஈரப்பதமான இடங்களில் தானே வளரக்கூடிய இதன் இலைகள், எதிர் அடுக்கில் கூர் நுனிப்பற்களுடன் கூடிய ஈட்டி வடிவம் கொண்டவை. இச்செடிக்கு சித்ர வல்லி, பச்சரிசி, பச்சரிசிக்கீரை. எம்பெருமான் பச்சரிசி என்ற பெயர்களும் உண்டு. 45 சென்டிமீட்டர் உயரம் கொண்ட இது ஆண்டு முழுவதும் வளரும்.
புரதம், கொழுப்புசத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ் பரஸ், இரும்பு மற்றும் வைட்டமின் சத்துக்கள் கொண்ட இதன் இலையை சமைத்து உண்டு வந்தால், உடல் வறட்சி, வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் உள்ள வெடிப்பு சரியாகும். குடல்புழுக்களை அகற்றி. மலமிளக்கியாகவும் செயல்படும். உடல் உஷ்ணத்தைக் குறைத்து. தலை வலியை போக்கும்.
சிவப்பு மற்றும் பச்சை என இரண்டு வகை அம்மான் பச்சரிசி செடியை அனைத்து வகை மண்ணிலும், எந்த பருவத்திலும் பயிரிடலாம். நாற்று பயிரிடுதல் முறையில் செடியை நட்டு, அதை வாடவிடாமல் தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு பராமரித்து கூடுதல் மகசூல் பெறலாம். 90 நாட்களுக்கு ஒரு முறை என வருடம் நான்கு முறை அறுவடை செய்யலாம். அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்ட இந்த செடியை நிழலில் உலர்த்தி வைத்து பயன்படுத்தலாம்.
வர்த்தக ரீதியாக செயல்படுபவர்கள் முழுச் செடியை விற்கலாம். அல்லது வீட்டில் பொடியாக தயாரித்தும் விற்பனை செய்யலாம். செடியை பறித்து, நிழலில் உலர்த்தி கல் உரலில் இடித்து பொடியாக்கலாம். அரைவை மில்லில் கொடுத்தும் பொடி செய்து பெற்றுக்கொள்ளலாம். பொடியை மென்மையான பருத்தி துணி மூலம் சலித்து கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
அம்மான் பச்சரிசி செடி அல்லது பொடியை அரசு அங்கீகாரம் பெற்ற சித்த மருத் துவர்களுக்கு விற்பனை செய்யலாம். அரசு அல்லது தனியார் சித்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மொத்த விற்பனையும் செய்யலாம். தற்போது இயற்கை மருத்துவ முறைகளுக்கு வரவேற்பு இருப்பதால் சந்தை மதிப்பு கொண்ட மருத்துவ செடியாகவும் உள்ளது.
சாகுபடி செய்ய ஏக்கர் கணக்கில் இடமோ அல்லது வற்றாத நீர் வளம் வேண்டுமென்றோ அவசியம் இல்லை. வீட்டு தோட்டத்தில் அல்லது மாடித்தோட்டத்திலும் பயிர் செய்யலாம். இட வசதி கொண்டவர்கள் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பசுமை குடில் அமைத்து ஆர்கானிக் முறையில் சாகுபடி செய்யலாம். தமிழகம் முழுவதும் கிராமப்புற சாலை ஓரங்களில் விளைந்துள்ள அம்மான் பச்சரிசி செடிதான் மருத்துவ காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. தென் மாவட்ட விளை நிலங்களில் ஊடு பயிராகவும், வாய்க்கால் வரப்பில் வளர்த்தும் விற்பனை செய்து வருகிறார்கள். பயிரிடுவதற்கான ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசு தோட்டக்கலைத் துறையினரை அணுகி கூடுதல் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.