செங்கோட்டை நகராட்சி எல்லை நுழைவுவாயில் கட்டிடத்தை இடிக்க அனுமதிக்க முடியாது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி நுழைவாயில் பகுதியில் அப்போதைய கேரள அரசால் திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் சங்கு முத்திரை பொறிக்கப்பட்ட துவாரபாலகா்கள் சிலையுடன் கூடிய பழைமைவாய்ந்த நுழைவுவாயில் அமைந்துள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக்கூறி, நுழைவு வாயிலை அகற்றும் பொருட்டு மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் செங்கோட்டை நகா்மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் ஷ்யாம் சுந்தா், துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையா் இளவரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா் நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெகன், சுடா்ஒளி, சரஸ்வதி, நகர திமுக செயலா் எஸ்எம்.ரஹீம், நகர காங்கிரஸ் தலைவா் ராம உள்பட பலா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், நூறாண்டு பழமையும் பெருமையும் வாய்ந்த நுழைவு வாயிலை பேணி பாதுகாப்பது செங்கோட்டை நகர மக்களின் கடமையாகும். பெருகி வரும் போக்குவரத்து நெருக்கடியை காரணம் காட்டி பாரம்பரியமிக்க நுழைவு வாயில் கட்டிடத்தை இடிக்க அனுமதிக்க முடியாது எனவும், போக்குவரத்து நெருக்கடியான நேரங்களில் கூடுதலாக போலீசாரை நியமித்து போக்குவரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிக்கலாம்: மாஞ்சோலை தபால் பட்டுவாடா: காட்டு வழியே பயணம்!