கடையநல்லூரில் முதல்முறையாக மினி மாரத்தான் போட்டி – 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வன உயிரின வார விழாவை முன்னிட்டு கடையநல்லூரில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

வருடந்தோறும் அக்டோபர் 2 முதல் 8 ம் தேதி வரை உலக வன உயிரின வாரம் கொண்டாடப்படுகிறது. வனம் மற்றும் வன உயிரினங்கள் அவசியம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு முக்கியமாக இளைய சமுதாயத்திடம் எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு வன உயிர் வார விழா கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை, நெல்லை வன உயிரினச் சரணாலயம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை தமிழ்நாடு இணைந்து மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி கடையநல்லூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 3 கிலோமீட்டர் தூரத்தில் முடிவடைந்தது. போட்டியில் சுமார் 250 வீரர்கள் கலந்து கொண்டனர். விழா நிறைவாக போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை தமிழ்நாடு நிறுவனர் சேக் உசேன் தலைமை உரையாற்றினார். கடையநல்லூர் உடற்கல்வி ஆசிரியர் முகம்மது இபுராகிம் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி உதவி வனப்பாதுகாவலர் ஷா நவாஸ்கான் துவக்கி வைத்தார். விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் பேராசிரியர் K.S.அப்துல் கனி வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ், விஸ்டம் பள்ளியின் தாளாளர் மற்றும் பள்ளி ஆலோசகர் Dr.L.S. மைதீன் பிள்ளை, Dr.O.S. சேக் உதுமான் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை தமிழ்நாடு பொருளாளர் மந்திரி மஜீத் அப்துல்காதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். தென்காசி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலர் கவிதா சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்தார். கடையநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் கனகராஜ் கலந்து கொண்டு மராத்தானி்ல் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களைக் கூறி சிறப்பித்தார். விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை தமிழ்நாடு அறங்காவலர் முகம்மது சாபி மற்றும் உறுப்பினர்கள் பத்மா, சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டம் மேற்க்குதொடர்ச்சி மலைகள் அதிகமாக காணப்படும் பகுதி ஆகும். இங்கு பல்வேறு வகையான தாவரங்களும், விலங்குகளும், பறவைகளும் வாழ்ந்து வருகின்றன. பொதுவாக காடுகளில் யானைகள், புலி, சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் காணப்படுகின்றன. இதில் எண்ணிலடங்கா தாவரங்களும் உண்டு. இவைகளை பாதுகாக்க ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வாரம் வன உயிரின வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த வருடமும் விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை தமிழ்நாடு மூலம் வனத்துறையுடன் இணைந்து பல்வேறு வன உயிர் விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது என விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை தமிழ்நாடு நிறுவனர் சேக் உசேன் கூறினார். பல்வேறு நிகழ்வுகள் மூலமாக மினி மாரத்தான், மலைவாழ் மக்களுடன் கலந்துரையாடல், பேரணிகள், ஒவியப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வனங்கள் மற்றும் வன உயிர் பற்றிய முக்கியத்துவங்களையும், அவசியத்தையும் பற்றிய விழிப்புணர்களை விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை தமிழ்நாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறக்கட்டளை நிறுவனர் சேக் உசேன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here