பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அகஸ்தியர் அருவியில் குளிக்க வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி வரை தடையை நீட்டித்துள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. தற்போது இங்கு அடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை தனியார் வாகனங்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்த நிலையில், இன்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் தங்கள் உடைமைகளை கொண்டு வருவதற்காக தனியார் வாகனங்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும் நாளை வனப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்துள்ளனர். மேலும் ஆண்டு முழுவதும் ஆர்ப்பரித்து கொட்டும் அகஸ்தியர் அருவியில் ஏற்கனவே சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அகஸ்தியர் அருவியில் குளிக்க வருகிற 5 ந் தேதி வரை தடையை நீட்டித்துள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.