களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் 100-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பக்தர்கள் நந்தவனம் போல் அமைத்து பராமரித்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் பழமையானதாகும். இக்கோவில் வெளி பிரகாரத்தில் முன்பு ஒரு காலத்தில் இருந்த நந்தவனம் அழிந்துவிட்டது.
இந்த நிலையில் கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் 5 பேர் மீண்டும் நந்தவனத்தை உருவாக்க முடிவு செய்தனர். இதையடுத்து அவர்களை மரங்களை நட்டு, பராமரிக்க தொடங்கினார்கள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அரியவகை மரக்கன்றுகள், மருத்துவ குணம் கொண்ட மூலிகை மரக்கன்றுகள், பூஞ்செடிகள் ஆகியவற்றை சேகரித்து, வரிசைப்படுத்தி தனித்தனியாக பாத்தி கட்டி மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். கடந்த 2 ஆண்டுகளில் அவர்கள் நட்டுவைத்த 80 வகையான 100-க்கும் மேற்பட்ட மரங்கள் நன்றாக வளர்ந்து தற்போது வெளிபிரகாரத்தை நந்தவனம் போல் பசுகையாக்கி உள்ளது.
இங்கு பல்வேறு ராசிக்குரிய 27 வகையான மரங்கள், 40 வில்வ மரங்கள், கோவிலின் ஸ்தல விருட்சமான புன்னை மரம், புரசை மரம், அரியவகை கருங்காலி மரம், மருத்துவ குணமிக்க வெள்ளிளோத்திரம் மரம், ஆவிமரம், புங்கை மரம், கடம்பை மரம், ஓதிய மரம், பன்னீர் மரம், இடி விழுவதை தடுக்கு அத்திமரம், பலா மரம், வெப்பாலை மரம், வெண் தேக்கு, ரோஸ்வுட், ஈட்டி மரம், மகோகணி மரம், நொச்சி மரம், மகாலிங்கம் மரம், மகிலி மரம், செண்பக மரம், ரெயில் தண்டவாளத்திற்கு பயன்படுத்தப்படும் மகாகனி மரம், தென்னை மரம், சிவபெருமானின் சடையை போல் பின்னி வளரக்கூடிய காட்டு எலுமிச்சை மரம் என 100-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளது.
மேலும் சுவாமிக்கு சூடுவதற்காக மனோ ரஞ்சிதம் பூ, கார்த்திகை மாதம் மட்டுமே பூக்கும் தன்மை கொண்ட மந்தாகரப் பூ, முல்லைப் பூ, பாரிஜாதம் உள்ளிட்ட பூச்செடிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. அழிந்து வரக்கூடிய அரிய வகை மரங்களை அடுத்த தலைமுறையினரும் அறியும் வகையில் நந்தவனத்தில் வளர்த்து வருகின்றனர். இங்கு களா மரங்களும் நடப்பட்டுள்ளது.
இந்த மரங்களை வளர்க்க பக்தர்கள் காய்ந்த இலைகளை மட்டும் இயற்கை உரமாக பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதற்கு நீர்ப்பாய்ச்சி பராமரித்தும் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதன் இலைகளை பறிக்காதவாறு பாதுகாத்து வருகிறார்கள்.
Also Read: அதே அமைதி, அதே பிரமிப்பு, அதே ஏகாந்தம் – தென்காசி பெரிய கோவில் பயணம்