வார விடுமுறையை முன்னிட்டு பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
பாபநாசத்தில் சிவன் கோயிலை தாண்டி களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் வருகிறது. அங்கிருந்து மலைப்பாதை ஆரம்பிக்கிறது. இரு புறமும் பசுமையான காட்சிகளைக் கண்டபடி செல்லும் போது, இடது பக்கத்தில் அகஸ்தியர் அருவி என்ற பலகை நம்மை வரவேற்கிறது. அந்த பாதையில் சென்றால், நீர்மின் தொகுப்பு, அதன் அருகே வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தில் இருந்து இறங்கி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் மிக அழகான ஆலமரம் நிற்கிறது. இங்கு ஏராளமான குரங்குக் கூட்டங்களையும் காண முடிகிறது. அங்கிருந்து சில அடிகள் எடுத்து வைத்தால் அகஸ்தியர் அருவி.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் பாபநாசம் அகஸ்தியர் அருவியும் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். தண்ணீர் மிகக் குளிர்ச்சியாகவும், மூலிகைகளின் மணம் கலந்தும் கொட்டுகிறது. இதில் குளிப்பதற்காக நெல்லை மாவட்டம் மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அகஸ்தியர் அருவியில் பெண் சுற்றுலாப் பயணிகளும், ஆண் சுற்றுலாப் பயணிகளும் தனித்தனியாக நின்று குளிக்கும் வகையில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் பெண்களுக்கு உடைகள் மாற்றுவதற்கு தனியாக இடம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டதால் சுற்றுலா பயணிகள் அங்கு வருவதை நிறுத்திவிட்டனர். இதனால் தற்போது, அகஸ்தியர் அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கிறார்கள்.
நேற்றும் இன்றும் விடுமுறை நாள் என்பதால் உள்ளூர், வெளியூர், பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவியில் குவிந்தனர். அவர்கள் ஏராளமான வாகனங்களில் வந்திருந்தனர். அருவியில் கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து புதுச்சேரியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
நாங்கள் முதலில் குற்றாலம் சென்றோம். ஆனால் அங்கு தண்ணீர் இல்லை. இதனால் தற்போது பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு வந்தோம். இங்கு தண்ணீர் நன்றாக விழுகிறது. இதில் நாங்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தோம்” என்று கூறினர்.
பாபநாசம் தலையணை மற்றும் அகஸ்தியர் அருவி தடாகப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆழமான தடாகத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழப்பது அதிகரித்து வந்த நிலையில், காவல்துறையினர், சுற்றுலாப் பயணிகள் தடாகத்தில் குளிக்க அனுமதிப்பதில்லை. அது பற்றி தொடர்ந்து ஒலிப்பெருக்கி வாயிலாகவும் அறிவிக்கப்பட்டு வருகிறது. எனவே அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்புக் கருதி அருவிகளில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் குளித்து வருவது நல்லது.
இதையும் படிக்க: மாஞ்சோலை தபால் பட்டுவாடா: காட்டு வழியே பயணம்!