மேக்கரையில் மிளா இறைச்சி சமைத்து சாப்பிட்ட 4 பேர் கைது

மேக்கரையில் மிளா இறைச்சி சமைத்து சாப்பிட்ட 4 பேர் கைது

மேக்கரையில் செந்நாய் கடித்த மிளாவின் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே மேக்கரை எருமைச்சாவடி அருகே செந்நாய் கடித்த மிளாவின் இறைச்சியை சமைத்து சாப்பிடுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் கடையநல்லூர் மற்றும் மேக்கரை பிரிவு வனவர்கள் முருகேசன், அம்பல வாணன், பண்பொழி பீட் வனகாப்பாளர்கள் முத்துச்சாமி, ராஜா, ஆகிய வனத்துறை அலுவலர்கள் சம்பந்தபட்ட கிராமத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, மேக்கரை எருமைச்சாவடி பகுதியில் செந்நாய் கடித்து இறந்து கிடந்த மிளாவின் இறைச்சியை மேக்கரை எருமைச்சாவடியை சேர்ந்த செல்லத்துரை மகன்கள் காசிராஜன், ஆறுமுகம் ,இசக்கிமுத்து, அய்யப்பன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் சேர்ந்து கறியை பங்கு போட்டு சமைத்து சாப்பிட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மிளாவின் கால், தோல் ஆகியவற்றை வனத்துறை யினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வனத் துறையினர் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 (9)ன் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். பின்னர் மாவட்ட வன அலுவலர் முருகனின் உத்தரவின் பேரில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி இவர்களுக்கு கடையநல்லூர் வன ரேஞ்சர் சுரேஷ் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபதாரம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார். இது போன்று வன உயிரினங்களை யார் வேட்டையாடினாலும் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் என ரேஞ்சர் சுரேஷ் தெரிவித்தார்.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள மான், மிளா, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் இறைச்சியை விற்பதோ, வாங்குவதோ, சமைப்பதோ தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here