தமிழக-கேரள எல்லைப்பகுதியில் தென்மலை அணையில் உள்ள சகதியில் சிக்கிய காட்டு மாடு பல மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டது.
தமிழக-கேரள எல்லை பகுதியான ஆரியங்காவு அருகே செந்தூரணி வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள தென்மலை – பரப்பாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் மாலை 20 காட்டு மாடுகள் (Indian Bison) மேய்ச்சலுக்கும், தண்ணீர் குடிப்பதற்கும் வந்தது. இதில் காட்டு மாடு ஒன்று மட்டும் எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கியது. அப்போது அங்கிருந்த வனத்துறையினர் கழுத்து வரை சேற்றில் சிக்கிய காட்டு மாடை பார்த்தனர். அந்த சகதியில் காட்டு மாடு சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தென்மலை வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காட்டு மாடை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டும் காட்டு மாடை கரைக்கு கொண்டுவர முடியவில்லை. இதை தொடர்ந்து நேற்று காலை மீண்டும் வனவிலங்கு காப்பாளர் அனி, உதவியாளர் வன உயிரின காப்பாளர் சுதிர், துணை ரேஞ்ச் அலுவலர் சந்தோஷ், பிரிவு வன அலுவலர் ஜெயக்குமார், வன அலுவலர்கள் பினில், ஆர்யா, ஸ்ரீராஜ், பைஜூ, வாட்சர்கள் ஷிபு, அசோகன், ராஜன்பிள்ளை மற்றும் தற்காலிக பணியாளர்கள் சுமேஷ், ஸ்ரீமோன், சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்க முயன்றனர். ஆனால், காலை 11 மணி வரையும் காட்டு மாடை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து காட்டு மாட்டின் முன் இருந்த சேற்றை அகற்றினர். பின்னர் சேற்றில் சிக்கினாலும், காட்டு மாடு தாக்கும் வாய்ப்பு உள்ளது என்பதால் மரக்கட்டைகளை போட்டு காட்டு மாட்டின் கொம்புகளில் கயிறுகளை கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். காட்டு மாடு மீட்கப்பட்டதை தொடர்ந்து காட்டுக்குள் தானாக ஓடி சென்றது.